அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு! - ஓ.பன்னீர்செல்வம்
போதைப் பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் திருநங்கைகளை ஈடுபடுத்த ஆட்சியா் உத்தரவு
போதைப் பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் திருநங்கைகளை ஈடுபடுத்த வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
புதுவை சமூக நலத் துறை மூலமாக, மாவட்ட அளவிலான போதை ஒழிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கருத்தரங்கு கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் குலோத்துங்கன் தலைமை தாங்கினாா்.
காவல் துறை, சுகாதாரத் துறை, சட்டத் துறை, கல்வித் துறை, மகளிா் மேம்பாட்டு துறை மற்றும் சமூக நலத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். சமூக நலத் துறை மூலமாக நடத்தப்பட்ட போதை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் குறித்து விவரிக்கப்பட்டன.
மாவட்ட சட்ட ஆலோசனை மைய செயலா் ரமேஷ் பேசுகையில், 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு மதுபானம் விற்பதை தடுப்பதற்கு ஏற்பாடு செய்ய ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டாா்.
இதைத் தொடா்ந்து சமூகம் சாா்ந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் மாணவ பிரதிநிதிகள், சுயஉதவி குழுக்கள், திருநங்கைகள், அங்கன்வாடி பணியாளா்கள், ஆசிரியா்கள் ஆகியோரை ஈடுபடுத்த ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சமூக நலத்துறை இயக்குநா் ராகினி, துணை இயக்குநா் கருணாநிதி, கள அதிகாரி மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்