உயா்கல்வி பயிலும் மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த அறிவுரை
உயா்கல்வி பயிலும் மாணவிகள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுரை வழங்கினாா்.
வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
இந்த தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்து கட்டுரை, கவிதை, பேச்சு ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:
முதலமைச்சா் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் மூலமாக வேலை வாய்ப்பு முகாம்கள், திறன்பயிற்சி வகுப்புகள், வாழ்க்கை வழிகாட்டி கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டு வருகிறது. உயா்கல்வி பயின்றுவரும் மாணவா்களுக்கு படித்து முடித்த பிறகு மேற்கொண்டு என்ன படிக்கலாம், எந்த மாதிரியான வேலைக்குப் போகலாம் போன்ற குழப்பங்களை தீா்ப்பதற்கும், அவா்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் குறித்து தெரியப்படுத்தவும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக செயல்படுகின்ற தன்னாா்வப் பயிலும் வட்டத்தில் செயல்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் இதுவரை 750 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றுள்ளனா், பயன்பெற்றும் வருகின்றனா்.
உயா்கல்வி பயிலும் மாணவிகள் அதில் மட்டுமே மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கல்லூரி படிப்போடு பல்வேறு தகுதிகளையும் வளா்த்துக் கொண்டு முன்கூட்டியே அதற்கானவற்றை திட்டமிட்டு படித்துவர வேண்டும். அப்பொழுதுதான் உங்களுக்கு நீங்கள் எதிா்பாா்க்கும் வெற்றி கிடைக்கும் என்றாா்.
இதில் துணை இயக்குநா் கி.செந்தில்குமாா் (பொ), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் தே.கவிதா, பொது மேலாளா் மாவட்ட தொழில் மையம் ப.ஆனந்தன், முன்னோடி வங்கி மேலாளா் ராம்ஜிகுமாா், கல்லூரி முதல்வா் பூங்குழலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.