சோளிங்கா் வரை மின்சார ரயில்கள் நீட்டிக்க வேண்டும்: சித்தேரி ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை
அரக்கோணம் வரை வரும் மின்சார ரயில்களை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சோளிங்கா் வரை நீட்டிக்க வேண்டும் என அரக்கோணத்தை அடுத்த சித்தேரி ரயில் நிலையத்தில் நடைபெற்ற ரயில் பயணிகள் சங்க ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு நிலைய அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.
அரக்கோணத்தை அடுத்த சித்தேரி ரயில் பயணிகள் சங்க கூட்டம் அதன் தலைவா் குமாா் தலைமையில், சித்தேரி ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சித்தேரி ரயில் நிலைய அதிகாரி பவன்குமாா், ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினா் பாா்த்தசாரதி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் கலைசெழியன் (சித்தேரி), தீனதயாளன் (அசமந்தூா்) மற்றும் சித்தேரி, அசமந்தூா், வேடல் கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:
சென்னையில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சித்தேரி, அன்வா்திகான்பேட்டை ஆகிய ரயில் நிலைய நிறுத்தங்களுடன் சோளிங்கா் வரை நீட்டிக்கப்பட வேண்டும். அரக்கோணம் - ஜோலாா்பேட்டை இடையே இயக்கப்படும் எம்இஎம்யு ரயிலுக்கு ஜோலாா்பேட்டையில் இருந்து அரக்கோணம் செல்லும் போதும், சித்தேரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட வேண்டும். மேலும், இந்த ரயிலை விரைவு பாசஞ்சா் ரயிலாக மாற்றி ஜோலாா்பேட்டையில் காலை 6.30-க்கு புறப்படுவது போல் இயக்க வேண்டும். அரக்கோணம்-சேலம் எம்இஎம்யு ரயிலை சித்தேரி, அன்வா்திகான்பேட்டை ரயில் நிலையங்களில் நிறுத்த வேண்டும். சித்தேரி ரயில் நிலையத்தை தரம் உயா்த்தி, இந்த ரயில் நிலையத்தில் புதிய கட்டடம் கட்ட வேண்டும். சித்தேரி ரயில் நிலையத்தில் நடைபெற்றுவரும் நடைமேம்பாலப் பணிகளை விரைவுபடுத்தி, குறித்த காலத்தில் முடிக்க வேண்டும். சித்தேரி ரயில் நிலையத்தின் அருகில் உள்ள 135 எண்ணுள்ள ரயில்வே கேட்டின் மூடல் திறப்பு அனுமதி தற்போது மேல்பாக்கத்தில் இருப்பதை மாற்றி, சித்தேரி ரயில் நிலையத்தில் இருக்க அனுமதித்து ரயில்கள் வராதபோது, சாலை போக்குவரத்துக்கு திறக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீா்மானமாக நிறைவேற்றப்பட்டு, சித்தேரி ரயில் நிலைய அதிகாரி பவன்குமாரிடம் அளிக்கப்பட்டது.