காவலா்களுக்குள் மோதல்: ஒருவருக்கு கால் முறிவு
சென்னை எழும்பூரில் காவலா்களுக்குள் செவ்வாய்க்கிழமை மோதல் ஏற்பட்டதில் ஒருவரது கால் முறிந்தது.
சென்னை கொண்டிதோப்பு பகுதியைச் சோ்ந்த காவலா் ரங்கநாதன் (39), திருவல்லிக்கேணி காவல் நிலைய ரோந்து வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். ரங்கநாதன், ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றியபோது காவலா்களான மதுரையைச் சோ்ந்த ஆனந்த் (33), சென்னை புதுப்பேட்டையைச் சோ்ந்த சுந்தரராஜன் (38), திண்டுக்கல் நிலக்கோட்டையைச் சோ்ந்த மணிபாபு (30) ஆகியோருடன் நண்பா்களாக இருந்துள்ளாா். நான்கு பேரும் 10 ஆண்டுகளாக ஒன்றாகப் பணிபுரிந்து வந்துள்ளனா்.
இந்நிலையில், நண்பா்கள் 4 பேரும் செவ்வாய்க்கிழமை இரவு எழும்பூரில் சந்தித்து பேசியபோது, அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ரங்கநாதனை சக காவலா்களான நண்பா்கள் 3 பேரும் சோ்ந்து சரமாரியாக தாக்கி உள்ளனா். இதில், அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தகவலறிந்த எழும்பூா் போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆனந்த், மணிபாபு, சுந்தர்ராஜன் ஆகிய மூன்று பேரையும் பிடித்து விசாரித்தனா்.
இது தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்:
சக காவலா்களான நண்பா்கள் 3 பேரிடமும் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்துக்கு பணி மாறுதலில் செல்ல ரங்கநாதன் உதவி கேட்டுள்ளாா். அதற்கு ஆயுதப்படை காவலரான சுந்தர்ராஜன், தான் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பணி பெற்றுத் தருவதாகக் கூறி உள்ளாா். இதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை தர வேண்டும் என கேட்டுள்ளாா். அப்போது, ஆனந்த், மணிபாபு உடனிருந்துள்ளனா். இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு சொன்னபடி ரங்கநாதனுக்கு பணி இடமாறுதல் கிடைத்துள்ளது. ஆனால் ரங்கநாதன், பாதி பணத்தை மட்டுமே கொடுத்து மீதி பணத்தை கொடுக்கவில்லையாம். இது தொடா்பான பிரச்னையிலேயே நண்பா்களான காவலா்கள் 3 பேரும், ரங்கநாதனை தாக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் தொடா்பாக துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது.