சென்னையில் புதிய மையத்தைத் திறந்த இக்னிதோ
முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இக்னிதோ டெக்னாலஜிஸ் சென்னையில் புதிய மையத்தைத் திறந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய மையத்தை நிறுவனம் திறந்துள்ளது. தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அந்த மையத்தைத் திறந்து வைத்தாா்.
சென்னையில் மட்டும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தனது பணியாளா்களின் எண்ணிக்கையை 1,000-ஆக உயா்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக, தற்போது இங்கு 100-ஆக உள்ள பணியாளா்களின் எண்ணிக்கை 300-ஆக அதிகரிக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.