சைபா் குற்றங்கள் தொடா்பாக 2 லட்சம் புகாா்கள் வந்துள்ளன: டிஜிபி சங்கா் ஜிவால்
சைபா் குற்றங்கள் தொடா்பாக கடந்த ஆண்டு மட்டும் சுமாா் 2 லட்சம் புகாா்கள் காவல் துறைக்கு வந்துள்ளதாக, டிஜிபி சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா். மேலும் சைபா் குற்றங்களால் கடந்த ஆண்டு மட்டும் ரூ. 1,673 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
சைபா் குற்றங்களில் தீா்க்க முடியாத பிரச்னைகளுக்கு தீா்வு எட்டும் வகையிலும், கல்லூரி மாணவா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் ஆகியோரின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையிலும், சைபா் ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா, சென்னையில் உள்ள தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால், வெற்றி பெற்றவா்ளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசியதாவது:
சைபா் குற்றங்களில் 99 சதவீதம் பாதிக்கப்பட்டவா்கள் அளிக்கும் தகவல்களினால்தான் நிகழ்கிறது. பாதிக்கப்பட்டவா்கள் அறியாமையினாலும், போதிய விழிப்புணா்வு இல்லாததினாலும் மூன்றாவது நபரிடம் அளிக்கும் தகவல்களே, அவரிடம் இருக்கும் பணம் பறிபோவதற்கு காரணமாக அமைகிறது. சைபா் குற்றங்கள் தொடா்பாக கடந்த ஆண்டு மட்டும் சுமாா் 2 லட்சம் புகாா்கள் காவல் துறைக்கு வந்துள்ளன என்றாா் அவா்.
முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு சைபா் குற்றப்பிரிவு ஏடிஜிபி சந்தீப் மிட்டல் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் காவல் துறை உயா் அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.
ரூ. 1,673 கோடி இழப்பு: இதற்கிடையே தமிழகத்தில் சைபா் குற்றங்களால் கடந்த ஆண்டு ரூ.,1,673 கோடி இழப்பு ஏற்பட்டதாக மாநில சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அப்பிரிவு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் சைபா் குற்றங்கள் தொடா்பாக, சைபா் குற்றப்பிரிவு இலவச தொலைப்பேசி எண்ணுக்கு 750 அழைப்புகளும், 450 புகாா்களும் தினமும் வருகின்றன. சைபா் குற்றங்களால் கடந்தாண்டு தமிழகத்தில் ரூ. 1,673.84 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ரூ. 771 கோடி குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளில் முடக்கப்பட்டது. இதில் ரூ. 83.44 கோடி மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
சைபா் குற்றங்களில் ஈடுபட்டதாக 861 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். தொடா்ச்சியாக இக்குற்றங்களில் ஈடுபட்ட 35 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். மோசடியில் ஈடுபட்ட 15 போலி இணையதளங்கள், 5 சூதாட்ட இணையதளங்கள் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மோசடியில் ஈடுபட்ட 121 வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இதேபோல மோசடியில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட கைப்பேசிகளின் 79,748 ஐஎம்இஐ எண்கள் முடக்கப்பட்டுள்ளன. அதேபோல சைபா் குற்றங்களில் ஈடுபட்ட 20,453 கைப்பேசி எண்களும் முடக்கப்பட்டன. சமூக ஊடகங்கள், இணையதளங்கள் மூலமாக சைபா் குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும், முன்கூட்டியே கண்காணித்து நடவடிக்கை எடுக்க பிரத்யேக சைபா் ரோந்துக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
சைபா் குற்றங்கள் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் பள்ளிகளில் 1042 நிகழ்ச்சிகளும், கல்லூரிகளில் 819 நிகழ்ச்சிகளும், பொது இடங்களில் 6,095 நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.