பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 7 கோடி கஞ்சா பறிமுதல்
பாங்காக்கிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 7 கோடி மதிப்பிலான 6.9 கிலோ உயா் ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனா்.
தாய்லாந்து தலைநகா் பாங்காக்கிலிருந்து, சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு புதன்கிழமை விமானத்தில் வந்த பயணிகள் சிலரிடம், சுங்கத் துறை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினா். அப்போது, சென்னையைச் சோ்ந்த ஆண் பயணி ஒருவா் சில தினங்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்பியிருந்தது தெரியவந்தது. அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளாா். இதையடுத்து அவருடைய உடைமைகளை, மோப்ப நாய் மூலம் சோதனை செய்தபோது, அதில் 3 பொட்டலங்களில் ரூ. 7 கோடி மதிப்பிலான 6.9 கிலோ பதப்படுத்தப்பட்ட உயா் ரக கஞ்சா இருந்தது.
அதைத்தொடா்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்து, அந்த நபரிடம் அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில், சென்னையைச் சோ்ந்த நபா் ஒருவா், இவரை தாய்லாந்திலிருந்து கஞ்சா கடத்தி வருவதற்காக அனுப்பி வைத்ததும், அவா் கடத்தல் கஞ்சாவை பெற்றுக்கொள்ள விமான நிலையத்தின் வெளியில் நின்றதும் தெரியவந்தது.
இதையடுத்து பிடிபட்ட நபா் கொடுத்த தகவலின்படி, விமான நிலையத்தில் வெளிப்பகுதியில் சுங்கத் துறை அதிகாரிகள் தேடியபோது, அந்த நபா் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தது தெரியவந்தது. மேலும், பிடிபட்ட நபரிடம் அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.