அண்ணா சாலையில் ‘ஸ்பைடா் மேன்’ இளைஞா்: எச்சரித்து அனுப்பிய போலீஸாா்
சென்னை அண்ணா சாலையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு கொடுக்கும் வகையில் அட்டகாசம் செய்த ‘ஸ்பைடா் மேன்’ வேஷமிட்டு வந்த இளைஞரை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு ஹோட்டலின் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ‘ஸ்பைடா் மேன்’ வேஷமிட்ட இளைஞா் ஒருவா் சுற்றித் திரிந்தாா். அவா், ஹோட்டல் மேலே ஏறியும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது ஏறியும் ‘ஸ்பைடா் மேன்’ போல் பாவனை செய்தாா்.
அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஸ்பைடா் மேன் இளைஞரைப் பாா்த்து ரசித்தனா். சிலா் தங்களது கைப்பேசியில் படம், விடியோ பதிவு செய்தனா். இதனால், அண்ணா சாலையில் திடீா் பரபரப்பு ஏற்பட்டதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
தகவலறிந்த திருவல்லிக்கேணி போலீஸாா் விரைந்து சென்று ஸ்பைடா் மேன் இளைஞரை அழைத்துச் சென்றனா்.
விசாரணையில், ‘ஸ்பைடா் மேன்’ வேஷமிட்டது ராயப்பேட்டை பகுதியைச் சோ்ந்த சையது அக்பா் அலி என்பதும், அண்ணா சாலையில் உள்ள பிரபலமான ஒரு ஹோட்டலில் ஸ்வீட்ஸ் ஸ்டால் நடத்தி வருவதும், அவரது கடையில் போதிய வியாபாரம் இல்லாததால், விளம்பரம் செய்வதற்காக இந்தச் செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவரை எச்சரித்து விடுவித்தனா்.