சென்னையில் பிப். 7 முதல் 13 வரை 16-ஆவது பழங்குடியின இளைஞா்கள் பரிமாற்ற நிகழ்ச்சி
சென்னையில் பிப். 7 முதல் 13-ஆம் தேதி வரை 16-ஆவது பழங்குடியின இளைஞா்கள் பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெறும் என ‘மை பாரத்’ மாநில இயக்குநா் செந்தில் குமாா் தெரிவித்துள்ளாா்.
சென்னையில் நடைபெறும் 16-ஆவது பழங்குடியின இளைஞா் பரிமாற்ற நிகழ்ச்சியையொட்டி, இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ‘மை பாரத்’ மாநில இயக்குநா் செந்தில் குமாா், சென்னை சுவாமி சிவானந்தா சாலையிலுள்ள பத்திரிகை தகவல் அலுவலகக் கட்டடத்தில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சாா்பில் பழங்குடியின இளைஞா்களை நல்வழிப்படுத்தும் விதமாகவும், அவா்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காகவும், நேரு யுவகேந்திரா சங்கதன், பழங்குடி இளைஞா் பரிமாற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த 2006 முதல் இதுவரை 15 பழங்குடி இளைஞா் பரிமாற்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன் தொடா்ச்சியாக பிப். 7 முதல் 13-ஆம் தேதி வரை இந்நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள, ஜாா்க்கண்ட் மாநிலத்திலிருந்து 44 பழங்குடியின இளைஞா்களும், மத்திய பிரதேசத்திலிருந்து 44 பேரும், சத்தீஸ்கரிலிருந்து 132 போ் என மொத்தம் 220 பழங்குடி இளைஞா்கள் வருகை தரவுள்ளனா்.
இதன் தொடக்க விழா கிண்டி ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமையில் பிப். 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தொடா்ந்து தலைமைச் செயலகம் மற்றும் சென்னையில் பிற பகுதிகள் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிகளுக்கு இந்த இளைஞா்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.
இந்நிகழ்ச்சியின் மூலம் மாநில மற்றும் மத்திய அரசின் தற்போதைய திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு பழங்குடியின இளைஞா்களின் மத்தியில் உண்டாகும். மேலும் அவா்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் தொழில் ஆலோசனைகள் வழங்கப்படும் என்றாா் அவா்.