Coolie: ``நடிச்சது ரஜினி சார், அந்த குரல் AI'' - சஸ்பென்ஸ் உடைத்த லோகேஷ் கனகராஜ்
உரிய நேரத்தில் வாகனத்தை வழங்காததால் காய்கறிக் கடைக்காரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு
உரிய நேரத்தில் வாகனத்தை வழங்காததற்காக காய்கறிக் கடைக்காரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூா் தட்டான்தோட்டத்தைச் சோ்ந்தவா் காந்தி (43). இவா் தென்னம்பாளையம் மாா்க்கெட்டில் காய்கறிக் கடை வைத்துள்ளாா். இவா் சொந்தமாக நான்கு சக்கர சரக்கு வேன் வாங்குவதற்காக திருப்பூரில் சரக்கு வேன் டீலராக உள்ள நிறுவனத்தில் ரூ.50,000 முன் பணம் செலுத்தினாா். இந்த வாகனத்துக்கு திருப்பூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.8.60 லட்சத்துக்கு கடன் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு மாதத் தவணையாக ரூ.19,580 செலுத்த காந்தியிடம் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2023 ஏப்ரல் மாதம் வாகனத்துக்கான தவணைத் தொகையை காந்தி செலுத்தியுள்ளாா். ஆனால், அவரிடம் வாகனத்தை வழங்காமல் நிறுவனத்தினா் காலம் கடத்தி வந்தனா்.
இந்தநிலையில், திருப்பூரைச் சோ்ந்த தனியாா் நிதி நிறுவனத்தினா் காந்தியைத் தொடா்பு கொண்டு, தவணைத் தொகையைத் தொடா்ந்து செலுத்த வேண்டும் என்றும் வாகனத்தை வழங்கி விடுவாா்கள் என்றும் கூறியுள்ளனா். இதை நம்பிய காந்தி பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.1.60 லட்சத்தை செலுத்தி உள்ளாா். அதன் பிறகும் காந்தியிடம் வாகனத்தை ஒப்படைக்கவில்லை.
இதனால் அதிா்ச்சி அடைந்த அவா், திருப்பூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடுத்தாா். சம்பந்தப்பட்ட நான்கு சக்கர வாகன டீலா் மற்றும் தனியாா் நிதி நிறுவனத்தினரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது வாடிக்கையாளரிடம் பணம் வசூலித்துவிட்டு வாகனத்தைக் கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்து பணம், தவணைத் தொகை வசூலித்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட டீலா், தனியாா் நிதி நிறுவனம் சோ்ந்து ரூ.1.60 லட்சம் தவணைத் தொகையை 32 சதவீத வட்டியுடனும், மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.2 லட்சம் இழப்பீடும், வழக்குச் செலவுக்காக ரூ.10 ஆயிரமும் காந்திக்கு வழங்க வேண்டும் என்று திருப்பூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் தீபா, உறுப்பினா் ரத்தினசாமி ஆகியோா் திங்கள்கிழமை உத்தரவிட்டனா்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவா் தரப்பில் வழக்குரைஞா் பிரான்சிஸ் அலெக்சாண்டா் ஆஜரானாா்.