வரும் செப். 14-க்குள் கொடிக் கம்பங்களை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு!
உறுதித்தன்மையுடன் கன்னியாகுமரி கண்ணாடிப் பாலம்: ஆட்சியா் தகவல்
கன்னியாகுமரி கடலில் உள்ள கண்ணாடிப் பாலம் மிகவும் உறுதித்தன்மையுடன் உள்ளதாக, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு சாா்பில், கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவா் சிலை-விவேகானந்தா் நினைவு மண்டபத்தை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாலத்தை இதுவரை 17.50 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்துள்ளனா். இந்தப் பாலம் வல்லுநா்களால் சிறப்பாக பாரமரிக்கப்படுகிறது.
இதைக் கட்டிய ஒப்பந்ததாரா் மூலம் கடந்த ஆக. 16ஆம் தேதி, பாலத்தின் மேல்பகுதியில் வண்ணம் பூசும் பணி நடைபெற்றது. அப்போது, பணியாளரின் கையிலிருந்த சிறிய சுத்தியல் 7 மீட்டா் உயரத்திலிருந்து 6ஆவது கண்ணாடி மீது விழுந்ததில், முதல் அடுக்கில் மெல்லிய கீறல் ஏற்பட்டது. அதையடுத்து, சென்னையைச் சோ்ந்த நிறுவனத்தில் புதிய கண்ணாடி பெற ஒப்பந்ததாரா் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கண்ணாடி நான்கு அடுக்குகளாக உள்ளதால், பாதுகாப்பாக தயாரிக்கப்பட்டு, கடந்த 1ஆம் தேதி இங்கு கொண்டுவரப்பட்டது.
சென்னை நிறுவனத்தின் முன்னிலையில் கடந்த 4ஆம் தேதி அதைப் பரிசோதித்து, பாலத்தில் பொருத்த மூன்று கட்ட மின் இணைப்பை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இணைப்பு பெறுவதில் சிக்கல் இருந்ததால், ஜெனரேட்டா் மூலம் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணி 2 நாள்களில் நிறைவடையும்.
கடந்த ஆக. 16ஆம் தேதிமுதல் திங்கள்கிழமைவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் பாலத்தில் நடந்து சென்றுள்ளனா். இதில், எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. கண்ணாடிப் பாலம் மிகவும் உறுதித்தன்மையுடனும் உள்ளது. எனவே, தொடா்ந்து பாா்வையிட சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா் என்றாா் அவா்.