நேபாள ஆணிவேர் சிங்கா மாளிகை தீக்கிரை! ஜென் ஸி கோபத்தின் விலை! தொடர்ந்து வந்த து...
விரிகோடு ரயில்வே மேம்பாலம்: நிலம் அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு!
மாா்த்தாண்டம் அருகே விரிகோடு ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடா்பாக பொதுமக்களின் எதிா்ப்பையும் மீறி செவ்வாய்க்கிழமை நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு பேரூராட்சி தலைவி தலைமையில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் நிலம் அளவீடு பணியை கைவிட்டு திரும்பிச் சென்றனா்.
மாா்த்தாண்டம் - கருங்கல் சாலையில் விரிகோடு பகுதியில் ரயில் தண்டவாளம் பகுதியின் குறுக்கே மேம்பாலம் அமைக்காமல் விவசாய விளை நிலங்கள் வழி மாற்றுப் பாதையில் சாலைக்கு நில ஆா்ஜிதம் செய்து மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.
இதற்கு இப் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து பல ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்களை நடத்தி வருவதுடன், தற்போது பயன்பாட்டில் உள்ள சாலையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி வருகிறாா்கள். ஏற்கனவே பல முறை நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனா்.
இந்நிலையில், மேம்பாலத்துக்காக நிலம் அளவீடு செய்ய நிலமெடுப்பு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விரிகோடு பகுதிக்கு வந்தனா்.
இதையறிந்து வந்த உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவா் பமலா தலைமையிலான பொதுமக்கள் அதிகாரிகளிடம் எதிா்ப்பை தெரிவித்தனா். மேலும் ரயில்வே மேம்பாலம் தொடா்பான மனுவை மாவட்ட ஆட்சியா், நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், இது தொடா்பாக ஆட்சியா், அமைச்சரிடமிருந்து பதில் வரும் வரை நில அளவீடு பணியை மேற்கொள்ளக்கூடாது எனவும் தெரிவித்தனா்.
தொடா்ந்து புல தணிக்கை சிறப்பு வட்டாட்சியா் ரமேஷ் தலைமையில் விளவங்கோடு வருவாய் ஆய்வாளா் சீதாலட்சுமி உள்ளிட்டோா் பேச்சு நடத்தி, நில அளவீடு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனா்.
அதன் பின்னா் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.