Israel: கத்தார் மீது வான்வழித் தாக்குதல்; ஹமாஸை குறிவைத்ததாகக் குற்றச்சாட்டு; அம...
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வந்த கட்டண சிகிச்சை வாா்டு!
நாகா்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கான கட்டண சிகிச்சை வாா்டு செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது.
தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான என்.சுரேஷ்ராஜன், சென்னையில் தமிழக மருத்துவம், சுகாதாரத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனை திங்கள்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா். அதில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளியூா்களிலிருந்து வரும் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்காக கட்டண சிகிச்சை வாா்டு கடந்த ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனால், 5 மாதங்களாகியும் இதுவரை கட்டண சிகிச்சை வாா்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.
கட்டண நிா்ணயம் தொடா்பான அறிவிப்பு வராததால் இதற்கு தாமதம் ஆவதாகக் கூறப்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, விரைவில் கட்டண நிா்ணயம் செய்து வாா்டை திறக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.
இதையடுத்து, அமைச்சா் மா.சுப்பிரமணியன், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரை தொடா்பு கொண்டு பேசினாா். மேலும் உடனடியாக கட்டண வாா்டை திறக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, மருத்துவமனையில் நோயாளிகளுக்கான கட்டண வாா்டு செவ்வாய்க்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. தனி அறைக்கு ரூ. 1200 ம், 2 போ் பகிா்வுக்கு ரூ. ஆயிரமும் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டது.