உலக சாம்பியன் குகேஷுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
உலக செஸ் சாம்பியன் குகேஷ் வெற்றிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உலக செஸ் சாம்பியன் குகேஷின் வெற்றியைத் தொடர்ந்து, அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ``குகேஷின் சாதனைக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி, அவரது இணையற்ற திறமை, கடின உழைப்பு மற்றும் அசைக்க முடியாத உறுதியின் விளைவாகும். அவரது வெற்றி சதுரங்க வரலாற்றில் அவரது பெயரை பொறித்திருப்பது மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான இளம் மனங்களை பெரிய கனவு காணவும், சிறந்து விளங்கவும் தூண்டியுள்ளது’’ என்று வாழ்த்து கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது, ``சர்வதேச சதுரங்க போட்டிகளில், குகேஷ் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வருகிறார் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். அவரது வெற்றி நமது நாட்டை பெருமைப்படுத்துவது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் கவனத்தையும் ஈர்க்கிறது.
இவ்வளவு இளம் வயதில் இதுபோன்ற அசாதாரண திறமைகளைக் காண்பது உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது’’ என்று பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, இந்த வாழ்த்துப் பதிவில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. 14 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 13 சுற்றுகளில் குகேஷ் - டிங் லிரென் ஆகியோர் 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று (டிச. 12) நடைபெற்ற 14 ஆவது சுற்றில் 58 ஆவது நகர்த்தலில் ஆட்டத்தை முடித்து ஒரு புள்ளியைப் பெற்றார். குகேஷ் 7.5, டிங் லிரென் 6.5; இதன்மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றார். இதன்மூலம், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.