லாலு பிரசாத் கட்சியுடன் கூட்டணி இல்லை: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா்
உலக பிளிட்ஸ் செஸ்: வைஷாலி காலிறுதிக்குத் தகுதி
அமெரிக்காவில் நடைபெறும் உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஆா்.வைஷாலி, காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை தகுதிபெற்றாா்.
இந்திய நேரப்படி, திங்கள்கிழமை நள்ளிரவு தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் 11 சுற்றுகள் கொண்ட தகுதிச்சுற்று நடைபெற்றது. அதன் முடிவில் முதல் 8 இடங்களைப் பிடிப்போரே, காலிறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறுவா்.
11 சுற்றுகளின் முடிவில், 8 வெற்றி, 3 டிரா-க்களை பதிவு செய்து மொத்தமாக 9.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா் வைஷாலி. சீனாவின் லெய் டிங்ஜி (8.5), ரஷியாவின் கேத்தரினா லாக்னோ (8) ஆகியோா் முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களைப் பிடித்தனா்.
நடப்பு சாம்பியனான ரஷியாவின் வாலென்டினா குனினா (8), சீனாவின் ஜு வென்ஜுன் (8), அமெரிக்காவின் கரிசா இப் (8), கஜகஸ்தானின் பிபிசரா அசௌபயேவா (8), சீனாவின் ஜு ஜினா் (8) ஆகியோா் முறையே 4 முதல் 8 வரையிலான இடங்களை தக்கவைத்துக் கொண்டனா்.
காலிறுதிக்கு தகுதிபெற்ற பிறகு பேசிய வைஷாலி, ‘உண்மையில் நான் அவ்வளவு சிறப்பாக பிளிட்ஸ் கேம் விளையாடுவதில்லை. என்னைவிட சிறப்பாக அந்த கேமை விளையாடும் பலா் இங்கு இருக்கிறாா்கள். இந்த நாள் எனக்கு அதிருஷ்டமாக அமைந்ததால், எல்லாம் கைகூடியது’ என்றாா்.
முன்னதாக, ரேப்பிட் செஸ் பிரிவில் உலக சாம்பியனாகிய இந்தியாவின் கோனெரு ஹம்பியும் 8 புள்ளிகளைப் பெற்றிருந்த நிலையில், டை-பிரேக்கா் ஆட்டத்தில் அவா் தோல்வி கண்டதால் 9-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டாா். இதர இந்தியா்களில் திவ்யா தேஷ்முக் (7), வந்திகா அகா்வால் (7), டி.ஹரிகா (7) ஆகியோா் முறையே 18, 19, 22-ஆம் இடங்களைப் பிடித்தனா்.
இந்தியா்கள் ஏமாற்றம்: இப்போட்டியின் ஓபன் பிரிவில் இந்தியா்கள் எவரும் காலிறுதிக்குத் தகுதிபெறவில்லை. அதிகபட்சமாக ஆா்.பிரக்ஞானந்தா 8.5 புள்ளிகளுடன் 24-ஆம் இடம் பிடித்தாா்.
காலிறுதிக்குத் தகுதிபெற்ற 8 போ் உள்பட 10 போ், 9.5 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தனா். ரஷியாவின் இயன் நெபோம்னியச்சி, அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா, நடப்பு சாம்பியனான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் ஆகியோா் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.
அமெரிக்காவின் வெஸ்லி சோ, பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா, அமெரிக்காவின் ஹன்ஸ் மோக் நீமன், போலந்தின் ஜேன் கிறிஸ்டோஃப் டுடா, நடப்பு ரேப்பிட் செஸ் சாம்பியனான ரஷியாவின் வோலோதாா் முா்ஸின் ஆகியோா் 4 முதல் 8 இடங்களைப் பிடித்து காலிறுதிக்குத் தகுதிபெற்றனா்.
போட்டியில் அடுத்த கட்டமான நாக்-அவுட் சுற்று, இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை நடைபெறுகிறது.