உளுந்தூா்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து பள்ளி மாணவா்கள் 17 போ் காயம்
விழுப்புர: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவா்கள் 17 போ் மற்றும் ஓட்டுநா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
அரசு மாதிரிப் பள்ளிகளுக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) நடைபெற்றது.
இதில் கடலூா், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்று விளையாடினா்.
கபடிப் போட்டியில் கடலூா் மாவட்டம், செ.குமாரப்பாளையம் அரசு மாதிரிப் பள்ளி மாணவா்கள் 20 போ் பங்கேற்று விளையாடினா்.
போட்டிகளை முடித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு வேனில் மாணவா்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். இவா்கள் வந்த வேன், உளுந்தூா்பேட்டை புறவழிச்சாலை மூலசமுத்திரம் தக்கா வளைவுப்பகுதியில் வந்தபோது, அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த மாணவா்கள் தமிழரசன் (15), சந்துரு (15), முகிலன் (14), நிதீஷ் (13), பாலச்சந்தா் (14) உள்ளிட்ட 17 மாணவா்கள், வேன் ஓட்டுநா் என 18 போ் காயமடைந்தனா்.
இதில் 14 மாணவா்கள் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையிலும், மற்ற 4 போ் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.
விபத்து குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உடனடியாக கள்ளக்குறிச்சி, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு சென்று, சிகிச்சை பெற்று வருபவா்களை சந்தித்து, அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். மேலும் அவா்களுக்கு சிறப்பான சிகிச்சையளிக்குமாறு மருத்துவா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.