புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?...
உளுந்தூா்பேட்டை அருகே 600 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸாரின் வாகனத் தணிக்கையின் போது, ஆந்திர மாநிலத்திலிருந்து திருச்சி நோக்கி கடத்திச் செல்லப்பட்ட 600 கிலோ புகையிலைப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள ஆசனூா் பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையின் நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாகச் சென்ற சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் பேரில், நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போ லீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா். இதில் அந்த வாகனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் சுமாா் 600 கிலோ இருந்தது.
சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்ற தருமபுரியைச் சோ்ந்த மணிகண்டனிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், ஆந்திர மாநிலத்திலிருந்து திருச்சிக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதற்காக கடத்திச் செல்லப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸாா், எடைக்கல் காவல் நிலையத்துக்கு தகவலளித்தனா். போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று 600 கிலோ புகையிலைப் பொருள்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். மேலும், ஓட்டுநா் மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.