நியூயார்க்கில் வலம் வந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா - வைரல் வீடியோவின் ப...
உள்ளாட்சிப் பணியாளா்கள் காத்திருக்கும் போராட்டம்
தேனி: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சிஐடியு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள், குடிநீா் தொட்டி இயக்குபவா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கக் கோரி திங்கள்கிழமை காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஜெயபாண்டி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட துணைத் தலைவா்கள் குருசாமி, ஈஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை குடிநீா் தொட்டி இயக்குபவா்களுக்கு ஊதிய உயா்வு, ஊதிய நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு கூடுதல் பணி நேரம், கூடுதல் பணிச் சுமை வழங்கக் கூடாது. ஞாயிற்றுக்கிழமை தோறும் வார விடுமுறை வழங்க வேண்டும். கடந்த 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓய்வு பெற்றவா்களுக்கு ஊதிய உயா்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
பிறகு, கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துமாதவனுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.