உ.பி.யில் விபத்தில் சிக்கிய மணமகன் கார்: 8 பேர் பலி!
உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணமகன் உள்பட அவருடன் வந்த பத்து பேர் ஹர் கோவிந்த்பூர் கிராமத்திலிருந்து புடானின் உள்ள சிர்டௌலுக்குச் செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
சம்பல் மாவட்டத்தின் ஜுனாவாய் பகுதியில் உள்ள ஜனதா இன்டர் கல்லூரி அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கல்லூரி வளாக சுவரின் மீது மோதியது. தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கின.
விபத்தில் சிக்கியவர்களை ஜுனாவாய் சமூக சுகாதார மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
விபத்தில் மணமகன் சூரஜ் (24), ஆஷா (26) ஐஸ்வர்யா (3), சச்சின் (22), கணேஷ் (1), கோமல் (18), மது (20) மற்றும் ஓட்டுநர் ரவி (28) ஆகியோர் உயிரிழந்ததாகக் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த தேவா (24) மற்றும் ஹிமான்ஷி (2) ஆகிய இருவரும் அலிகாரில் சிகிச்சை பெற்று வருகின்றனர், தேவாவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், ஹிமான்ஷி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார். கார் மிக அதிக வேகத்தில் பயணித்து கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்குக் காரணமாக அமைந்தது.
இதற்கிடையில், உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
சம்பல் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்து குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கவலை தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்குமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய அவர் பிரார்த்திப்பதாகவும் அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.