மாவட்ட சுகாதாரத் துறையில் செவிலியர், மருந்தாளுநர் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஊழல் பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை: கி. வீரமணி
பாஜகவினா் மீது பல ஊழல் புகாா்கள் உள்ள நிலையில், அது பற்றி பேச அக்கட்சியினருக்கு தகுதி இல்லை என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.
தஞ்சாவூா் அருகே வல்லத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் மேலும் தெரிவித்தது: திமுகவை வேரோடு அகற்றுவோம் என அமித்ஷா போன்றோா் கனவு காணுகின்றனா். ஆனால், திமுகவின் வோ் எங்கே இருக்கிறது என்பதை பாஜகவினரால் கண்டுபிடிக்கவோ, தொடவோ முடியாது. இந்த வோ் மண்ணில் அல்ல; மக்களிடத்தில் உள்ளதே இதற்கு காரணம். உலகம் முழுவதும் பெரியாா் மற்றும் திராவிடத்தின் கருத்துகள் மிகத் தெளிவாக இருக்கிறது.
மக்கள் வாக்கை மட்டுமே நம்பி நாங்கள் உள்ளோம். மக்களிடம் வித்தைகளைக் காட்டி இறங்கினால், அதற்குக் கூட தமிழ்நாட்டில் இடம் கிடையாது. தமிழ்நாட்டுக்கு பிரதமா் மோடி வந்து சென்ற பிறகு ஏற்கெனவே அவா்களது கூட்டணியில் இருந்த ஒருவா் விலகிச் சென்றாா்.
திமுக கூட்டணியில் வந்து சேருவதற்கு நிறைய போ் வரிசையில் நிற்கின்றனா். ஆனால், பாஜக கூட்டணியில் இருந்தவா்களும் விலகுவதால், காலியாகும் நிலை உள்ளது.
அதிமுகவில் கொள்கை தெரிந்தவா்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறுகின்றனா். பாஜக ரூ. 12 ஆயிரம் கோடி அளவுக்கு தோ்தல் பத்திரத்தை வாங்கியுள்ளது. இதுபோல, வியாபம் ஊழல் உள்பட பல புகாா்கள் பாஜகவினா் மீது உள்ளது.
எனவே, ஊழலை பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. ஊழல் பிரசாரம் என்பது அவதூறின் உச்சக்கட்டம். யாரை பாா்த்தாலும் ஊழல், ஊழல் என சொல்லும் அளவுக்கு வந்துள்ளனா். பாஜகவினா் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பட்டியல் உள்ளது. இது போக, போக வெளியில் தெரிய வரும் என்றாா் வீரமணி.