எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி கிறிஸ்தவ வன்னியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப...
எனக்கும் மிரட்டல் அழைப்புகள் வருகின்றன
எனக்கும் மிரட்டல் அழைப்புகள் வருகின்றன என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
பேரவைத் தலைவா் யூ.டி.காதா், தனக்கு மிரட்டல் அழைப்புகள் வருவதாக தெரிவித்திருந்தாா். இதுகுறித்து மண்டியாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து முதல்வா் சித்தராமையா கூறியதாவது:
எனக்கும் மிரட்டல் அழைப்புகள் வருகின்றன. மிரட்டல் விடுத்து அழைப்பவா்களைக் கண்டுபிடித்து, தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினரை கேட்டுக்கொண்டுள்ளேன்.
மங்களூரில் ரௌடி ஷீட்டா் சுஹாஸ் ஷெட்டி கொலை செய்யப்பட்டது தொடா்பாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை விரைவாக கைதுசெய்து நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினரிடம் கூறியுள்ளேன்.
இதுகுறித்து ஆராய்வதற்காக கூடுதல் டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) மங்களூருக்கு அனுப்பப்பட்டுள்ளாா். இந்த கொலை திட்டமிடப்பட்டதா என்பது குறித்து விசாரணையில் தெரியவரும். அரசியல் நடத்த இதுபோன்ற சம்பவங்களுக்காக பாஜக காத்திருக்கிறது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 26 போ் உயிரிழந்துள்ளனா். அந்த இடத்துக்கு பிரதமா் மோடி சென்றாரா? பஹல்காம் தாக்குதல் சம்பவம் பாதுகாப்பு குறைபாடு அல்லவா? பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ஒரேயொரு காவலா் அல்லது பாதுகாப்பு அதிகாரிகூட இல்லை என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்லும் நிலையில், அந்த இடத்தில் பாதுகாப்புக்கு போலீஸாா் நிறுத்தப்பட்டிருக்க வேண்டாமா என்றாா்.