தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ்
எலான் மஸ்க்கின் செயல்திறன் துறையில் 22 வயது இந்தியப் பொறியாளர்!
எலான் மஸ்க்கின் செயல்திறன் துறையில் 22 வயது இந்தியப் பொறியாளர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
உலகப் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளவரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க்கின் அரசு செயல் திறன் துறையில் 22 வயதான இந்திய வம்சாவளி பொறியாளர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.
அமெரிக்க அரசு செயல் திறன் துறையில் 19 முதல் 24 வயதுக்குள்பட்ட ஆறு பொறியாளர்களுக்கு அரசின் முக்கிய அமைப்புகளில் பொறுப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறைந்த வயதில் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளி பொறியாளரான ஆகாஷ் போபா, எலான் மஸ்க்கின் அரசாங்க செயல்திறன் துறையால் பணியமர்த்தப்பட்டுள்ளார். போபா ஒரு யுசி பெர்க்லி பட்டதாரியாவார். ஆகாஷ் போபாவைத் தவிர்த்து மற்ற 5 பொறியாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் எட்வர்ட் கோரிஸ்டைன், லூக் ஃபாரிட்டர், கௌடியர் கோல் கில்லியன், கேவின் கிளிகர் மற்றும் ஈதன் ஷாட்ரான் ஆகியோரும் இடம்பெறுள்ளனர்.
ஆகாஷ் போபா யார்?
ஆகாஷ் போபா, பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். இவர் தொழில்நுட்பத் துறைத் தலைவர்களுக்கான மேலாண்மை, தொழில்முனைவோர் மற்றும் தொழில்நுட்பத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக தன்னுடைய லின்கெடின்னில் தெரிவித்துள்ளார்.
ஆகாஷ் போபா கடந்த காலங்களில் பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ் ஹெட்ஜ் ஃபண்டில் முதலீட்டு பொறியியல் பயிற்சியாளராகவும் மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா மற்றும் தியேலின் பாலந்திர் டெக்னாலஜிஸில் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.