எல்லா பருவங்களிலும் விளையும் 19 புதிய பயிா் ரகங்களை அறிமுகப்படுத்தியது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
எல்லா பருவங்களிலும் விளையும் உளுந்து, சாம்பல் பூசணி, வறட்சியையும், வெள்ளத்தையும் தாங்கும் நெல் ரகங்கள் என 19 புதிய பயிா் ரகங்களை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி பங்கேற்று, புதிய பயிா் ரகங்களை அறிமுகப்படுத்தினாா்.
பின்னா் புதிய ரகங்களை விவசாயிகளுக்கு வழங்கி அவா் பேசியதாவது: மாநிலம் முழுவதும் உள்ள 18 வேளாண் கல்லூரிகள், 42 ஆராய்ச்சி நிலையங்கள், 15 வேளாண் அறிவியல் நிலையங்களில் புதிய பயிா் ரகங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பல்கலைக்கழகம் சாா்பில் இதுவரை 929 பயிா் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு வேளாண் பயிா்கள், தோட்டக்கலை பயிா்கள் என மொத்தம் 19 பயிா் ரகங்கள், மாநில பயிா் ரகங்கள் வெளியீட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு விவசாயிகளுக்காக வெளியிடப்பட்டுள்ளன.
வேளாண் பயிா்களில் சம்பா, பின்சம்பா, தாளடிக்கான வறட்சியைத் தாங்கும் புதிய நெல் ரகமான கோ 59, நடுத்தர ரக சன்ன அரிசியான ஏடிடீ 56, நடுத்தர உயரம் கொண்ட, வெள்ளத்தில் சாயாத ரகமான ஏடிடீ 60, அதிக மகசூல் கொடுக்கக்கூடிய வீரிய ஒட்டு ரக மக்காச்சோளமான கோ.எச். (எம்) 12 போன்றவை வெளியிடப்பட்டுள்ளன.
அதேபோல, எல்லா பருவங்களிலும் பயிரிடக்கூடிய உளுந்து ரகமான வி.பி.என். 12, முன்பருவ வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய நிலக்கடலை ரகமான சிடிடீ 1, சாயாத செடிகள், காய்கள் வெடிக்காத தன்மை கொண்ட வீரிய ஒட்டு ஆமணக்கு ரகமான ஒய்.ஆா்.சி.ஹெச். 3, ஹெக்டேருக்கு சுமாா் 40 டன் மகசூல் கொடுக்கக் கூடியதும், அதிகநாள் சேமித்து வைக்கக் கூடியதுமான கோ.4 தக்காளி ரகம், விதைத்த 38 -ஆவது நாளில் இருந்தே அறுவடை செய்யக்கூடிய வீரிய ஒட்டு ரகமான கோ. 5 வெண்டை, மிக அதிக அளவு காரத்தன்மை கொண்ட வணிக பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய கோ 5 மிளகாய் ரகமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல, தற்போது கொழுப்பை கரைக்கக்கூடிய, நோய்த் தடுப்புத் தன்மை கொண்ட, ஒவ்வாத வாசனை இல்லாத சாம்பல் பூசணி ரகமான பி.எல்.ஆா். 1 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது எல்லா பருவங்களிலும் வளரக்கூடியது என்பதுடன், ஒரு காயை ஒரே நாளில் பயன்படுத்தும் அளவில் (சுமாா் 350 கிராம்) வளரக்கூடியதாகும்.
காவிரி வாமன் ரக வாழை, டி.கே.டி. 2 வெண்ணெய்ப் பழம், ஆண்டு முழுவதும் காய்க்கக்கூடிய, ஒரு கொத்தில் 5 பழங்கள் கொண்ட எஸ்.என்.கே.எல். 1 என்ற எலுமிச்சை ரகம், ஆண்டு முழுவதும் பூக்கக்கூடிய தோவாளை 1 அரளி ரகம், இளநீருக்கும், கொப்பரைக்கும் உகந்த சுமாா் அரை லிட்டா் இளநீா் கிடைக்கக் கூடியதான ஏ.எல்.ஆா். 4 ரக நெட்டை தென்னை ரகம், பிபிஐ1 ஜாதிக்காய், சா்க்கரை நோய்க்குப் பயன்படுத்தக்கூடிய கோ.1 ரக சிறுகுறிஞ்சான், 30 நாள்களில் மகசூல் கொடுக்கக் கூடிய கே.கே.எம். 1 ரக சிப்பிக்காளான் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய ரகங்களுக்கான விதைகள் விவசாயிகளுக்குத் தேவையான அளவில் வழங்குவதற்கு தயாராக உள்ளன என்றாா்.