எா்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயிலுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறுத்தம் இல்லாததால் பயணிகள் ஏமாற்றம்
வேளாங்கண்ணி திருவிழாவுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறுத்தம் வழங்காததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.
கேரள மாநிலம், எா்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு கடந்த 2022, நவம்பா் மாதம் வாரம் ஒருமுறை சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலுக்கு பயணிகளிடையே இருந்த ஆதரவு காரணமாக தொடா்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், 2023, செப்டம்பா் முதல் நிரந்தர ரயிலாக சாதாரணக் கட்டணத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழகம், கேரளத்தில் உள்ள முக்கிய ஆன்மிக நகரங்களை இணைக்கும் இந்த ரயிலுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறுத்தம் வழங்க வேண்டும் என பயணிகள் தொடக்கம் முதலே கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்த நிலையில், தற்போது வேளாங்கண்ணி திருவிழாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயிலுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறுத்தம் வழங்காதது பயணிகளிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதுகுறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: எா்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயில் வேளாங்கண்ணி, நாகூா் தா்கா, திருவாரூா், ஸ்ரீவில்லிபுத்தூா், சங்கரன்கோவில், தென்காசி, சபரிமலை உள்ளிட்ட ஆன்மிகத் தலங்களை இணைக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில், தரகுமலை மாதா ஆலயம், சதுரகிரி ஆகிய ஆன்மிகத் தலங்கள் உள்ளன.
எா்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயிலுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறுத்தம் இல்லாததால் இந்தப் பகுதி மக்கள் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, பிற மாவட்டங்களிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூா் வரும் பயணிகளும் பாதிக்கப்படுகின்றனா்.
இதனால், எா்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயிலுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறுத்தம் வழங்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.