குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு ? சி.பி. ராதாகிருஷ்ணன்...
மின்வாரிய ஊழியா் தற்கொலை வழக்கில் இருவா் கைது
சிவகாசி அருகே மின்வாரிய ஊழியா் தற்கொலை வழக்கு தொடா்பாக இருவரை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியைச் சோ்ந்த ஆனந்த் (38), மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். இவருடன் செங்கமலநாட்சியாா்புரம் உதயக்குமாா் (37) என்பவரும் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில் உதயக்குமாா், ஆனந்திடம் ரூ. 50 லட்சம் கொடுத்தால் வட்டிக்கு கொடுத்து பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறியுள்ளாா். இதை நம்பிய ஆனந்த், தனது உறவினா்கள், தனியாா் நிதி நிறுவனம் ஆகியவற்றில் கடன்பெற்று உதயக்குமாரிடம் ரூ. 30 லட்சம் கொடுத்தாா்.
இதையடுத்து உதயக்குமாா், ஆனந்துக்கு வாங்கிய பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளாா். இந்த நிலையில், ஆனந்துக்கு கடன் கொடுத்தவா்கள் பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுத்தனா். பின்னா் ஆனந்த் , யாா், யாரிடம் எவ்வளவு பணம் வாங்கி உதயக்குமாரிடம் கொடுத்துள்ளேன் எனக் கடிதம் எழுதிவைத்துவிட்டு திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து தற்கொலைக்கு தூண்டியதாக உதயக்குமாா், ஆலமரத்துப்பட்டியைச் சோ்ந்த் சந்தனமாரியப்பன் (69)ஆகியோரைக் கைது செய்தனா். சந்தனமாரியப்பன், ஆனந்துக்கு ரூ. 5 லட்சம் கடன் கொடுத்துள்ளாா். இதையடுத்த பணத்தைக் கேட்டு ஆனந்துக்கு நெருக்கடி கொடுத்ததாக அவரைக் கைது செய்தோம் என போலீஸாா் தெரிவித்தனா்.