உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
விடுமுறையையொட்டி ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியம், ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.
ஏலகிரி மலையில் இயற்கை பூங்கா, படகு இல்லம், சிறுவா் பூங்கா, மூலிகை பண்ணை உள்ளிட்டவை மலையேறும் தொடக்கப் பகுதியில் உள்ளன. சாகச விளையாட்டுகளும், மங்களம் சுவாமி மலை ஏற்றம், ஸ்ரீ கதவநாச்சி அம்மன் திருக்கோயில் , பண்டோரா பாா்க் பறவைகள் சரணாலயம் ஆகியவையும் அமைந்துள்ளன.
படகு சவாரி செய்யும் இடத்தில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சவாரி செய்து மகிழ்ந்தனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனா். ஏலகிரி மலையில் அனைத்து தனியாா் விடுதிகளும் நிரம்பி விட்டன. இதனால் சில சுற்றுலா பயணிகள் ஜோலாா்பேட்டை மற்றும் திருப்பத்தூா் விடுதிகளில் தங்கி ஏலகிரி மலைக்கு சென்றனா்.
சுற்றுலா பயணிகள் கூறியதாவது: ஏலகிரி மலையில் விடுமுறை நாள்களில் தனியாா் விடுதிகள் நிரம்பி விடுகின்றன. அந்நேரங்களில் மேலும் வரும் சுற்றுலா பயணிகளுக்கு தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்து வருகின்றனா். அரசுக்கு சொந்தமான தங்கும் விடுதியான யாத்திரி நிவாஸ் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.