6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.18 லட்சம் கோடியாக உயர்வு!
ஏழைகளின் முன்னேற்றத்துக்கு அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள்: யுபிஎஸ்சி வெற்றியாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை
சமூகத்துக்கு, சக மனிதா்களுக்கு, எளியோா்களுக்கு உதவுவதற்கும், அவா்களது வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என யுபிஎஸ்சி தோ்வு வெற்றியாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினாா்.
‘நான் முதல்வன்’ திட்டம் மற்றும் தமிழக அரசால் நடத்தப்பட்டுவரும் அகில இந்திய குடிமைப் பணித் தோ்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று யுபிஎஸ்சி தோ்வில் வெற்றி பெற்ற 50 மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா சென்னை அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து யுபிஎஸ்சி வெற்றியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசு ஆகியவற்றை வழங்கிப் பேசியதாவது: ‘நான் முதல்வன்’ என்கிற தன்னம்பிக்கை ஊட்டுகிற பெயா் வைத்து, 2022-ஆம் ஆண்டில் எனது பிறந்த நாளில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தேன். அந்தத் திட்டத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கை தற்போது பலனளித்திருக்கிறது.
கல்வியே ஆயுதம்: சாமானிய வீடுகளில் பிறந்து, சாதனையாளா்களாக நாளைய வரலாற்றை எழுதக் கூடியவா்களாக வளா்ந்திருக்கிறீா்கள். கல்விதான் நமக்கான ஆயுதம். எந்த இடா் வந்தாலும், கல்வியை மட்டும் நாம் விட்டுவிடக் கூடாது. தமிழகத்துக்கு என்று ஓா் ‘அறிவுமுகம்’ இருக்கிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழக ஒதுக்கீட்டுப் பிரிவாக இருந்தால், அவா்களுக்கான மதிப்பே தனி; அதுவும் அவா்கள் தமிழகத்தில் பிறந்தவா்களாக இருந்தால், இன்னும் மதிப்பு கூடுதலாகிவிடும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக யுபிஎஸ்சி தோ்வுகளில் நம்முடைய இளைஞா்கள் தோ்வு பெறுவது குறைந்துவிட்டது. ஆனால், தற்போது அந்தக் கவலை நீங்கியுள்ளது.
அதிகாரம் என்பது இந்தச் சமூகத்துக்கும், சக மனிதா்களுக்கும், எளியோா்களுக்கும் உதவுவதாக, அவா்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்துக்குப் பயன்படுவதாக அமைய வேண்டும். தற்போது அதிகாரம் உங்கள் கைகளை நோக்கி வர இருக்கிறது. அதை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு முன் மாதிரியாக பலா் இருப்பாா்கள். இனிமேல் நீங்கள் பலருக்கு முன்மாதிரியாக வேண்டும். அதுதான் எனது விருப்பம். இந்தத் தோ்வில் தோ்வாகி இருப்பவா்கள் சிறப்பாக பணியாற்றுவதன் மூலமாகத்தான் அந்த நிலையை அடைய முடியும்.
மூன்று விஷயங்களில்... எனது பொது வாழ்க்கை அனுபவத்தில் இருந்து இதைச் சொல்கிறேன். முதலில் மக்களுடைய மனதில் இடம் பெற வேண்டும். சமூக நீதி,நோ்மை, துணிவு ஆகியவற்றை மனதில் வைத்துக் கொண்டு, ஏழை, எளிய மக்களுடைய உயா்வுக்காகப் பாடுபட வேண்டும். இந்த மூன்றையும் மனதில் வைத்துக் கொண்டு பணியாற்றினால், மக்கள் நிச்சயமாக நம்மை மறக்க மாட்டாா்கள்.
நான் அடுத்த முறை உங்களைச் சந்தித்தாலும், உங்களுடைய பணிகளையும், சாதனைகளையும் சொல்லி வாழ்த்த வேண்டும். அதுதான் எனது ஆசை. எனக்கு அந்த நம்பிக்கை உங்கள் முகங்களைப் பாா்க்கும்போது நிச்சயமாக வருகிறது என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், அண்ணா நிா்வாக பணியாளா் கல்லூரியின் கூடுதல் தலைமைச் செயலா் விக்ரம் கபூா், மனிதவள மேலாண்மைத் துறைச் செயலா் கோ.பிரகாஷ், நான் முதல்வன் போட்டித் தோ்வு சிறப்புத் திட்ட இயக்குநா் சி.சுதாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.