கோயில் காவலாளி கொலைச் சம்பவத்துக்கு முதல்வா் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்: பிரே...
’ஐ.எஸ்.ஐ.’ தரச் சான்று பெற்ற ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்?
தரம் குறைந்த ஹெல்மெட்களால் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று ‘நுகர்வோர் விவகாரம் மற்றும் இந்திய தர நிர்ணய துறை’ சனிக்கிழமை(ஜூலை 5) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தலைக்கவசம் அணிந்துகொள்வது இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தரமான தலைக்கவசங்கள் மட்டுமே விற்கப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அரசு புள்ளி விவரத்தின்படி, ஹெல்மெட் அணியாத காரணத்தால் கடந்த 2022-ஆம் ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 50,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனா்.
தரம் குறைந்த ஹெல்மெட் அணிந்துகொண்டு செல்வதால் விபத்து ஏற்படும்போது தலைக்கு உரிய பாதுகாப்பு இல்லாமல் போய் விடுகிறது. இந்த காரணத்தால், கடைகளில் விற்கப்படும் ஹெல்மெட்கள் அனைத்தும் ’பி.ஐ.எஸ்.’-இன் ’ஐ.எஸ்.ஐ.’ தரச் சான்று பெற்ற ஹெல்மெட்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக, சாலையோரமாக விற்கப்படும் பெரும்பாலான ஹெல்மெட்கள் தரம் குறைவான பொருள்களாகவே இருப்பதை அறிய முடிவதாகவும், அவற்றை இரு சக்கர வாகன ஓட்டிகள் வாங்கி அணிய வேண்டாமெனவும் கூறப்பட்டுள்ளது.
தரமான தலைக்கவசங்கள் தயாரிக்காத தயாரிப்பாளர்கள் மற்றும் அவற்றை விற்கும் விற்பனையாளர்கள் மீது மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 21 கோடிக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் அவற்றில் செல்வோரின் பாதுகாப்பே முக்கியம் என்றும் ‘நுகர்வோர் விவகாரம் மற்றும் இந்திய தர நிர்ணய துறையின்’ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.