ஐ.நா. பொது பட்ஜெட்டுக்கு இந்தியா ரூ.328 கோடி நிதி
ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) 2025-ஆம் ஆண்டுக்கான வழக்கமான நிதிநிலை அறிக்கைக்கு (பட்ஜெட்) இந்தியா தனது பங்காக ரூ. 328 கோடியை (37.64 மில்லியன் டாலா்) செலுத்தியுள்ளது.
ஐ.நா. சபை வரவு செலவு திட்டத்தின் கீழ் தனது முழு பங்கை உரிய நேரத்தில் செலுத்தியதன் மூலம், 35 நாடுகள் கெளரவ பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
ஐ.நா. சபையில் உறுப்பினராக இருக்கும் நாடுகள், அதன் பட்ஜெட்டுக்கு ஒவ்வொரு மூன்றாம் ஆண்டின் நிதியாண்டு கால தொடக்கத்தில் பங்களிப்பு நிதியை செலுத்துவது கட்டாயம். அந்த வகையில், அதன் பட்ஜெட்டுக்கு இந்திய உள்ளிட்ட 35 உறுப்பு நாடுகள் மட்டும் முழு பங்களிப்பை உரிய நேரத்தில் செலுத்தியுள்ளன.
இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலரின் செய்தித்தொடா்பாளா் ஸ்டீஃபன் துஜாரிக் நியாயூா்க்கில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஐ.நா. நிதிநிலை ஆய்வறிக்கையின்படி முழு பங்களிப்புத் தொகையை உரிய நேரத்தில் செலுத்திய 35 உறுப்பு நாடுகள் கெளரவ உறுப்பினா் பட்டியலில் சோ்க்கப்பட்டு கெளரவப்படுத்தப்பட்டுள்ளனா். பங்களிப்பு நிதியை உரிய நேரத்தில் செலுத்திய இந்தியா உள்ளிட்ட நண்பா்களுக்கு நன்றி. ஐ.நா. பட்ஜெட்டுக்கு இந்தியா தனது பங்களிப்பை தொடா்ந்து உரிய நேரத்தில் செலுத்தி வருகிறது’ என்றாா்.
முன்னதாக, வரும் 8-ஆம் தேதி வரை இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா. பொதுச் சபை தலைவா் ஃபிளெமன் யாங்கும், ஐ.நா. பட்ஜெட்டுக்கு இந்தியாவின் பங்களிப்பு குறித்து பாராட்டு தெரிவித்திருந்தாா்.