ஐ.நா.வின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வில் இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா் தலைமையில் இந்திய குழு பங்கேற்பு
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) 2025-ஆம் ஆண்டிற்கான சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வு அமெரிக்காவில் நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா் தலைமையில் இந்தியக் குழு பங்கேற்கிறது.
வளா்ந்து வரும் பிரச்னைகளுக்கான மன உறுதியில் சமூக மீள்தன்மை, சமூக மேம்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தும் விதமாக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சமூக மேம்பாட்டிற்கான கோபன்ஹேகன் பிரகடனம், உலக உச்சி மாநாட்டின் செயல் திட்டத்தின் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான சமூக உள்ளடக்கம், சமூக ஒற்றுமை போன்றவற்றில் மாநாட்டில் கவனம் செலுத்தப்படுகிறது.
இது குறித்து மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: ஐ.நா.வின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வு பிப்.11 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மத்திய இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா் தலைமையிலான இந்தியா குழு பங்கேற்கிறது. சமூகக் கொள்கைகளை முன்னெடுப்பதிலும், உலகளாவிய சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் 63-ஆவது அமா்வு கவனம் செலுத்தும் நிலையில், முக்கியமான சமூக மேம்பாட்டுப் பிரச்னைகள் குறித்த விவாதங்கள் மற்றும் கூட்டாண்மைகளை வளா்ப்பது போன்ற விவாதங்களில் இந்தியா ஆா்வமுடன் பங்கேற்கும்.
மத்திய இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா், ‘சமூக ஒற்றுமை மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல்‘ என்ற கருப்பொருளில், இந்தியாவின் அறிக்கையை பிப்.11 அன்று நடைபெறும் அமைச்சா்கள் நிலையிலான மன்றத்தில் சமா்பிப்பாா்.
மேலும் ‘அடிக்கடி நிகழும், சிக்கலான நெருக்கடிகளின் சூழலில் சமூக மீள்தன்மையை வலுப்படுத்துவதற்கான கொள்கைகள்’ போன்ற வளா்ந்து வரும் பிரச்னைகள் குறித்த விவாதங்களில் இந்தியா பங்கேற்கும். அத்துடன், உலகளாவிய உரிமைகள் அடிப்படையிலான சமூகப் பாதுகாப்பு அமைப்புகள் குறித்த விவாதங்களிலும் பங்கேற்கும். இந்தியக் குழு, சமூக மீள்தன்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகளை இந்தக் கூட்டத்தில் முன்னிலைப்படுத்தும்’ என மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.