கரூா் வழியாக செல்லும் ஈரோடு - செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்!
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரிப்பு
பென்னாகரம்: கர்நாடக அணைகளில் நீர் திறப்பு மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாள்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாற்றம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசி மணல், மொசல் மடுவு மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் மழை பெய்து வந்ததாலும், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும் நீர்வரத்து ஒகேனக்கல்லுக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு
வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி வினாடிக்கு 8,000 கன அடியாக இருந்த நீர் வரத்து சனிக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவார் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
மேலும், நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை மற்றும் கர்நாடக அணைகளில் நீர்திறப்பு உள்ளிட்ட காரணங்களால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும், தமிழக காவிரி கரையோர நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.