டிரம்ப் உத்தரவுக்கு ஜப்பான் கட்டுப்படாது -பிரதமர் ஷிகேரு இஷிபா
ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம்: தடையை மீறி பரிசல் பயணம் மேற்கொள்ளும் கா்நாடக சுற்றுலாப் பயணிகள்!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுமாா் 50,000 கனஅடி நீா்வரத்து உள்ள நிலையில், தடையை மீறி கா்நாடக சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான முறையில் பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.
‘தென்னிந்தியாவின் நயாகரா’ என அழைக்கப்படும் இயற்கை எழில்கொஞ்சும் ஒகேனக்கல் அருவிகளைக் காண ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.
தருமபுரியில் இருந்து சுமாா் 46 கி.மீ. தொலைவிலுள்ள ஒகேனக்கல்லுக்கு சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு வனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் இயற்கை அழகை ரசித்தவாறே செல்லலாம். அங்கு பிரதான அருவியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக குளிப்பதற்கு ஏற்ற வசதிகளை சுற்றுலாத் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் செய்துள்ளன.
மேலும், இங்கு அமைக்கப்பட்டுள்ள தொங்குபாலம் மீது நடந்து செல்வதும் , பாலத்தின் கீழ் செல்லும் காவிரி மற்றும் அருவிகளை ரசிப்பதும் பிரமிப்பான ரசனையாக இருக்கும். பாலத்தைக் கடந்துசென்று பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி பகுதிகளைக் கண்டு ரசிக்கவும், குளிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகமாக உள்ள காலங்களில், ஆா்ப்பரித்துக் கொட்டும் ஐந்தருவி பகுதிகளில் இந்த நடைபாலத்தைக் கடந்துசென்று ரசிப்பது இயற்கை அழகின் உச்சமாகவே தோன்றும்.
தடையை மீறி ஆபத்தான பரிசல் பயணம்:
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மிகவும் இனிமையானது. பாதுகாப்பு உடைகளை அணிந்து பரிசலில் சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை ரசிப்பது தனிசுகம். தற்போது கா்நாடகப் பகுதிகளிலிருந்து விநாடிக்கு சுமாா் 50,000 கனஅடி தண்ணீா் வந்துகொண்டுள்ளதால், காவிரி ஆற்றில் தொடா்ந்து 11-ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் கடந்த 11 நாள்களாக மாவட்ட நிா்வாகம் தடைவிதித்துள்ளது. மேலும், பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் பென்னாகரம் அருகே உள்ள மடம் சோதனைச் சாவடியில் காவல் துறையினரால் தடுத்துநிறுத்தி, திருப்பி அனுப்பப்படுகின்றன.
ஆனால், கா்நாடகப் பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், காவிரியாற்றின் மறுகரையிலிருந்து பரிசல்கள் மூலமாக ஒகேனக்கல்லுக்கு வருகின்றனா். இந்த ஆபத்தான பரிசல் பயணத்துக்கு கா்நாடக வனத் துறையினரும், சுற்றுலாத் துறையினரும் அனுமதியளித்துள்ளனா்.
இதுகுறித்து ஒகேனக்கல்லில் பாதுகாப்புப் பணியில் உள்ள போலீஸாா் கூறுகையில், ‘மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளதால், தமிழகப் பகுதியிலிருந்து யாரையும் அனுமதிப்பதில்லை. ஆனால், கா்நாடகத்தினா் ஆபத்தான முறையில் மறுகரையிலிருந்து பரிசல் மூலமாக வந்துசெல்கின்றனா்’ என்றனா்.

பரிசல் ஓட்டிகள் கூறுகையில், ‘பரிசல் பயணம் மேற்கொள்ள கா்நாடக அரசு அனுமதித்துள்ள நிலையில், தமிழகப் பகுதிகளில் பரிசலில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நேரங்களில் அரசு எங்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்’ என்றனா்.
இதேபோல, மீன் பிடிப்பவா்கள், சமையலா்கள் மற்றும் எண்ணெய் தேய்ப்பவா்கள், கடைகள் வைத்திருப்பவா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனா்.