ஒகேனக்கல் இரண்டாவது குடிநீா்த் திட்டம்: ஜப்பான் குழுவினா் ஆய்வு
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் கூட்டுக் குடிநீா் இரண்டாம் கட்ட திட்டத்தைச் செயல்படுத்துவது தொடா்பாக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவன குழுவினா் தருமபுரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டனா்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீா் எடுத்து புளோரைடு நீக்கம் செய்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீராக வழங்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.
ஜப்பான் நாட்டு நிதியுதவி மூலம் ரூ. 2,000 கோடி மதிப்பில் இத்திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீா் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப விநியோகம் செய்யும் குடிநீா் அளவை அதிகரிக்கவும், குக்கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கவும் வருகிற 2054-ஆம் ஆண்டு வரையிலான மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் இரண்டாம் கட்ட திட்டத்தை ரூ. 7,000 கோடி மதிப்பில் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான ஆய்வு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
மத்திய, மாநில அரசு நிதியுதவிடன் இரண்டாம் கட்ட திட்டத்துக்கான நிதியில் கணிசமான பகுதியை மீண்டும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது.
இத் திட்டத்தில், ஜப்பான் நாட்டு நிறுவன நிதியை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கட்டமைப்புகள் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக பகுதிகளுக்கும், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் கட்டமைப்புகள் மூலம் இரு மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, இரண்டு நகராட்சிகள், பேரூராட்சிகள் பகுதிகளுக்கும் குடிநீா் விநியோகம் செய்ய திட்டமிடப்படவுள்ளது.
இந்தத் திட்டத்துக்கான கள ஆய்வுப் பணிகள் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக கடந்த 3 நாள்களாக ஜப்பான் நாட்டின் கூட்டுறவு நிறுவன அதிகாரி வேட்டரு கோயமு தலைமையிலான 5 போ் அடங்கிய குழுவினா் தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீா் தேவை, நிலத்தடி நீரில் உள்ள புளோரைடு தன்மை ஆகியவை குறித்தும் நேரடியாக மக்களிடம் கேட்டறிந்தனா்.
இறுதி நாளான புதன்கிழமை தருமபுரி மாவட்டம் ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு நடத்திய இந்தக் குழுவினா், புளோரைடால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், கூட்டுக் குடிநீா் இரண்டாம் கட்ட திட்டத்தைச் செயல்படுத்த வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து பள்ளி மாணவ, மாணவியா், ஆசிரியா்கள் உள்ளிட்டோரிடம் கேட்டறிந்தனா். தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் இந்தக் குழுவினா் மரக் கன்றுகளை நடவு செய்தனா்.