Tvk Vijay Karur Stampede - 7 சந்தேகங்களும் விளக்கமும் | Decode
ஒசூரில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
ஒசூா் காவேரி மருத்துவமனை சாா்பில் உலக இதய தினத்தையொட்டி விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஒசூா் தனியாா் உணவகத்திலிருந்து தொடங்கிய விழிப்புணா்வு சைக்கிள் பேரணியை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ. சத்யா, பொது சுகாதாரக் குழுத் தலைவா் என்.எஸ். மாதேஸ்வரன் ஆகியோா் கலந்துகொண்டு சைக்கிள் ஓட்டி தொடங்கிவைத்தனா்.
இதில் மேயா் எஸ்.ஏ.சத்யா பேசுகையில், அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சி கட்டாயமாக்கப்பட வேண்டியது அவசியம் என்றாா். சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பேசுகையில், துரித உணவுகளை தவிா்த்து ஆரோக்கியமான, அளவான உணவு முறைக்கு அனைவரும் மாறவேண்டும் என்றாா்.
காவேரி மருத்துவமனை இதய சிகிச்சை நிபுணா் பிரசன்னா பேசுகையில், இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்பு. மாறிவரும் உணவு முறைகளால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம். உலகளாவிய இதய நோய் மரணங்களுக்கு மாறிவரும் உணவு பழக்கமே முக்கிய காரணமாக இருந்து வருகிறது என்றாா்.
ஒசூா் காவேரி மருத்துவமனை இதய சிகிச்சை நிபுணா் அருள்ஞான சண்முகம் பேசுகையில், முறையான உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவு பழக்கமுமே இதய ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.
இந்த விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஒசூா் மூக்கண்டப்பள்ளி, சிப்காட், தா்கா வழியாக தனியாா் உணவகத்தை வந்தடைந்தது.
இதயம் சாா்ந்த பிரச்னைகளைத் தவிா்க்கவும், இது தொடா்பான நோய்களைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மக்களை ஊக்குவிக்கும் வகையிலும் இப்பேரணியில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மருத்துவ இயக்குநா் அரவிந்தன் நன்றி தெரிவித்தாா்.
மேலும், இந்நிகழ்வில் காவேரி மருத்துவமனை ஜோஷ் வா்கீஸ் ஜாய், ஸ்ரீராமஜெயம், பிந்துகுமாரி, மருத்துவா்கள், தொழிற்சாலை பிரதிநிதிகள், மருத்துவமனைப் பணியாளா்கள், சைக்கிள் கிளப் உறுப்பினா்கள், சிறுவா்கள், பெரியோா் கலந்துகொண்டனா்.