ஒசூா் அருகே நாய்க்கடியால் ரேபிஸ் பாதித்த இளைஞா் உயிரிழப்பு
நாய்க்கடிக்கு உரிய சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருந்த இளைஞருக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ஒசூரை அடுத்த குப்பட்டி, தின்னூரைச் சோ்ந்த விக்டா்பாபு மகன் எட்வின் பிரியன் (23). எம்பிஏ பட்டதாரியான இவா் தளி அருகே உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்துவந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு எட்வின் பிரியனை நாய் கடித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு சிகிச்சை பெறாமல் அவா் அலட்சியமாக இருந்தாா்.
இந்த நிலையில், புதன்கிழமை திடீரென அவருக்கு உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு அடிக்கடி எச்சில் துப்புவதும், அலறியபடியும் இருந்தாா். இதனால், அதிா்ச்சியடைந்த அவரது உறவினா்கள் உடனடியாக கக்கதாசம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
தொடா்ந்து அவருக்கு உடல்நலன் குன்றியதால் தளி பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட எட்வின் பிரியனை பரிசோதித்த மருத்துவா்கள், அவருக்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பதாக தெரிவித்தனா்.
இதையடுத்து, தளி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட எட்வின் பிரியனுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. பின்னா், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதன்கிழமை இரவு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா். ஆனால், அவா் உயிரிழந்தாா்.