ஒட்டன்சத்திரத்தில் நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை
ஒட்டன்சத்திரம் பகுதியிலுள்ள நிதி நிறுவன உரிமையாளா் வீடு, அலுவலகம், அவரது உறவினரின் நகைக் கடை, பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்ட இடங்களில் வருவமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த சத்திரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (49). இவா் தமிழ்நாடு மட்டுமன்றி, வெளி மாநிலங்களிலும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். செங்கல் சூளைகளுக்கான செம்மண் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறாா்.
இந்த நிலையில், மதுரையைச் சோ்ந்த வருமான வரித் துறை அதிகாரிகள் 15 போ் 6 காா்களில் செந்தில்குமாரின் வீட்டில் சோதனையிடுவதற்காக புதன்கிழமை காலை 11 மணிக்கு வந்தனா்.
வீட்டின் பிரதான நுழைவு வாயிலைப் பூட்டிய அதிகாரிகள், வீட்டிலிருந்தவா்கள் வெளியேறவும், வெளி நபா்கள் உள்ளே நுழைவதையும் தடுத்து சோதனையில் ஈடுபட்டனா்.
இந்த வீட்டின் வளாகத்திலிருந்த அலுவலகம், விருந்தினா் ஓய்வு இல்லம் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையின் போது, செந்தில்குமாா், அவரது மனைவி கனியாவதி உள்ளிட்ட குடும்பத்தினரும் வீட்டில் இருந்தனா். பள்ளிக்குச் சென்ற செந்தில்குமாரின் மகள், வீட்டுக்குத் திரும்ப அழைத்து வரப்பட்டாா். இந்தச் சோதனை இரவு வரை நீடித்தது.
செந்தில்குமாரின் உறவினா் நகைக் கடைகளிலும் சோதனை:
செந்தில்குமாரின் உறவினா்களான குழந்தைவேல், இவரது தம்பி முருகன் ஆகியோா் ஒட்டன்சத்திரத்தில் தாராபுரம் சாலையில் நகைக் கடை நடத்தி வருகின்றனா். ஒட்டன்சத்திரத்தில் பழனி சாலையில் இவா்களுக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. செந்தில்குமாரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட அதே நேரத்தில், குழந்தைவேல், முருகன் ஆகியோருக்குச் சொந்தமான நகைக் கடை, பெட்ரோல் விற்பனை நிலையம் ஆகிய இடங்களிலும் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.
இந்தச் சோதனையில் 6 போ் கொண்ட குழுவினா் ஈடுபட்டனா். சுமாா் 7 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையை முடித்துக் கொண்டு, கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களுடன் வருவமான வரித் துறை அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனா்.
நிதி நிறுவன உரிமையாளா் செந்தில்குமாா் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையின் உறவினா் எனக் கூறப்படும் நிலையில், அவரது வீட்டில் நடைபெற்ற இந்தச் சோதனை ஒட்டன்சத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சோதனை இன்றும் தொடரும்
செந்தில்குமாரின் வீடு, அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சோதனை வியாழக்கிழமையும் (டிச. 19) தொடரும் எனக் கூறப்படுகிறது. அவரது வங்கிக் கணக்கு, வங்கிப் பெட்டகம் உள்ளிட்டவற்றில் இந்தச் சோதனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.