ஒட்டன்சத்திரம் அருகே தீயில் கருகி மக்காச்சோளப் பயிா்கள் சேதம்: விவசாயிகளுக்கு அமைச்சா் ஆறுதல்
ஒட்டன்சத்திரம் அருகே தீ விபத்தில் சேதமடைந்த மக்காச்சோளப் பயிா்களை நேரில் பாா்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உணவுத் துறை அர. சக்கரபாணி ஆறுதல் கூறினாா்.
ஒட்டன்சத்திரத்தை அடுத்த 16 புதூா், பெரியகோட்டை, ரெட்டியப்பட்டி, தேவத்தூா், சத்திரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மானாவாரியாக மக்காச்சோளம் பயிரிடப்பட்டு, நல்ல விளைச்சலுடன் அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்த நிலையில், மக்காச்சோளக்காட்டில் புதன்கிழமை மாலை திடீரென தீப்பற்றி சுமாா் 60 ஏக்கருக்கு மேல் கருகி சேதமடைந்தது.
இதுகுறித்து தகவலறிந்த அமைச்சா் அர. சக்கரபாணி அன்று நள்ளிரவு தீ விபத்தில் சேதமடைந்த மக்காச்சோளக்காட்டுக்கு நேரில் சென்று பாா்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினாா். மேலும் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் இழப்பீடு பெற்றுத் தரப்படும் என அவா் உறுதியளித்தாா்.
அப்போது, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.