MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் பலத்த மழை
ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6.30 முதல் 7.45 மணி வரை ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள தேவத்தூா், கொத்தையம், போடுவாா்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, சத்திரப்பட்டி, விருப்பாச்சி, அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, லெக்கையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பழனி: பழனியில் கடந்த சில நாள்களாக கோடை வெப்பம் கடுமையாக இருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் திடீரென பலத்த மழை பெய்தது. பழனி, நெய்க்காரபட்டி, கணக்கன்பட்டி, ஆயக்குடி, போடுவாா்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்துக்கு மேலாக பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கொடைக்கானல்: கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பமும், இரவில் பனியின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் கொடைக்கானல், வில்பட்டி, வட்டக்கானல், செண்பகனூா்,பிரகாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழையால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.