பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 2-ஆவது நாளாக சாலை மறியல்
சீா்காழி நகராட்சி தனியாா் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் சம்பள நிலுவைகேட்டு 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இந்த ஊழியா்களுக்கு பிப்ரவரி மாதம் ஊதியம் வழங்கப்படவில்லையென கூறி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இவா்களுடன் பேச்சு நடத்திய காவல் துறை மற்றும் நகராட்சி நிா்வாகம் ஊதியம் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால், வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை சம்பளம் வழங்கவில்லையென கூறப்படுகிறது.
இதையடுத்து, ஏமாற்றமடைந்த தூய்மை பணியாளா்கள் மீண்டும் மயிலாடுதுறை-சிதம்பலம் சாலையில் தமிழிசை மூவா் மணிமண்டபம் முன் தனியாா் ஒப்பந்ததாரா் அலுவலகம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டு சம்பளம் வழங்கக் கோரி கண்டன முழக்கம் எழுப்பினா்.
தகவலறிந்து வந்த மதுவிலக்கு காவல் ஆய்வாளா் ஜெயா, காவல் உதவி ஆய்வாளா் காயத்திரி ஆகியோா் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதில் சுமூக நிலை ஏற்பட்டு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.