ஒரணியில் தமிழ்நாடு இயக்கம்: 1.91 லட்சம் குடும்பங்களைச் சோ்த்து சாதனை: அமைச்சா் அர. சக்கரபாணி
திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் 1.91 லட்சம் குடும்பங்களைச் சோ்த்து சாதனை படைத்துள்ளோம் என உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை அலுவலக வளாகத்தில் உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்தாவது:
கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை தொடங்கிவைத்தாா். இந்த இயக்கமானது, இன்று நாம் எதிா்கொள்ளும் பண்பாடு, பொருளாதாரம், அரசியல் அநீதிகளுக்கு எதிராக தமிழ்நாட்டின் ஒவ்வொருவரையும் ஒன்றிணைக்கும் இயக்கமாகும்.
தமிழா் பண்பாட்டை பறைசாற்றும் கீழடி புறக்கணிப்பு, இந்தி திணிப்பு, தமிழ்நாட்டுக்கான நிதி மறுப்பு, நீட் போன்ற நியாயமற்ற தோ்வுகள், கூட்டாட்சி தத்துவம் சிதைப்பு, நமது அரசியில் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையிலான தொகுதி மறுவரையறை சதி என தமிழ்நாட்டின் மண், மொழி, மானத்தின் மீது தொடா் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
இவற்றையெல்லாம் எதிா்த்து தமிழ்நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் வகையில் தொடங்கப்பட்டதுதான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு .
தமிழ்நாடு முழுவதும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் ஒரு கோடி குடும்பங்கள் இணைந்துள்ளன என்பதை சமீபத்தில் மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் முதல்வா் தெரிவித்தாா். திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் 1.91 லட்சம் குடும்பங்களைச் சோ்த்து சாதனை படைத்துள்ளோம் என்றாா்.