நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டா் அளவில் 7.1-ஆகப் பதிவு!
ஒரே துணை; ஒரேயொரு முட்டை; சடலங்களே உணவு... கொத்துக் கொத்தாக இறந்துபோன பாறு கழுகுகளின் கதை!
வயிறு புடைக்க இறந்த மாட்டின் இறைச்சியை உண்டுவிட்டு மரக்கிளையில் வரிசையாக உட்கார்ந்துக்கொண்டிருந்த பாறு கழுகுகள், கண்கள் சொருகி, வாயில் நீர் வடிய ஒவ்வொன்றாக மரக்கிளைகளில் இருந்து கீழே பொத் பொத்தென்று விழுந்தன. சில நொடிகளில் அவை அத்தனையும் இறந்தும்போயின.
'பாறு கழுகுகள்னா என்னப் பறவை' என்று கேட்பவர்களுக்கு புரிகிறபடி சொல்ல வேண்டுமென்றால், அவைதாம் 'பிணம் தின்னி கழுகுகள்.' ஆங்கிலத்தில் வல்ச்சர் (vulture). 1980-கள் வரை இந்தியா முழுக்க லட்சக்கணக்கான பாறு கழுகுகள் இருந்தன. ஆனால், தற்போது தமிழ்நாட்டில் மட்டும் வெறும் 200 பாறு கழுகுகள் மட்டுமே இருக்கின்றன. கிட்டத்தட்ட 96 சதவிகித பாறு கழுகுகள் அழிந்தே விட்டனவாம். பாறு கழுகுகள் இனம் அழிந்துபோக என்னதான் காரணம்; அவற்றின் இயல்புகள் என்ன என்று சூழலியல் எழுத்தாளர் மற்றும் ஆய்வாளரான கோவை சதாசிவம் அவர்களிடம் பேசினோம்...
''ஆகாயத்தில் பாறு கழுகுகள் வட்டமிட்டுக்கொண்டிருந்தால், அங்கு புலியோ, சிங்கமோ அல்லது சிறுத்தையோ ஏதோ ஒரு விலங்கை வேட்டையாடியிருக்கிறது என்று அர்த்தம். அவை உண்டதுபோக மிச்சம் மீதி இருப்பதை பாறு கழுகுகள் உண்டு தீர்க்கும். சில மணி நேரத்தில், அந்த இடத்தில் ஒரு வேட்டை நடந்ததற்கான எந்த சுவடும் இல்லாதபடிக்கு மொத்தமாக தின்று தீர்த்துவிடும் பாறு கழுகுகள். எலும்புகளைக்கூட மிச்சம் வைக்காமல் சாப்பிடும் எலும்பு உண்ணிகளான தாடிப் பாறுகளும் இருக்கின்றன.
பாறு கழுகுகள் வேட்டையாடாது. இறந்த சடலங்களை மட்டுமே சாப்பிடும். எவ்வளவு அழுகிய சடலமாக இருந்தாலும் பாறுக்கள் சாப்பிட்டுவிடும். தொற்று நோய் வந்து இறந்த விலங்குகளின் சடலங்களைச் சாப்பிட்டாலும் பாறுக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அந்தளவுக்கு, எத்தகைய நோய்க்கிருமிகளையும் செரிமானம் செய்வதற்கான அமிலங்கள் அவற்றின் வயிற்றில் சுரக்கின்றன. ரேபிஸ் வந்து இறந்த நாய்களின் சடலங்களை உண்டாலும் பாறுக்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது என்றால், பார்த்துக்கொள்ளுங்கள்'' என்றவர், உயிர்ச்சூழலியலில் பாறு கழுகுகளின் பங்களிப்பு என்ன என்பதையும் விளக்க ஆரம்பித்தார்.
''தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மனிதர்கள் நுழைய முடியாத காடுகள் மேற்கு தொடர்ச்சி மலையில் இன்னும் கொஞ்சம் இருக்கின்றன. அங்கே ஒரு யானை வயதாகி இறந்துவிட்டால், அதன் உடல் மட்கி மறைய ஆறு மாதங்களாவது ஆகும். இதுவே, அந்த யானை இறந்த காட்டுக்குள் பாறு கழுகுகள் இருந்தால், ஐந்தே நாளில் யானையின் சடலம் இருந்த தடமே தெரியாத அளவுக்கு தின்று தீர்த்துவிடும். பாறு கழுகுகள் கும்பலாக வானத்தில் பறக்கின்றன என்றால், அங்கே தங்களுடைய உணவான இறந்த சடலம் இருக்கும் என்பது தெரிந்த கழுதைப்புலி, செந்தாய் போன்றவையும் யானை இறந்த இடத்துக்கு வந்துவிடும். எல்லாமும் சேர்ந்து யானையின் சடலத்தை தின்று தீர்த்து காட்டை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும். பாறு கழுகுகளே இல்லாத வனத்தில் ஒரு யானை இறந்தால், அதுவும் நதிகள் உற்பத்தியாகிற இடங்களில் இறந்து கிடந்தால், அந்த நதியில் இருக்கிற நீர் மூலம் சமவெளியில் வாழும் மனிதர்களுக்கு பலவிதமான நோய் தொற்றுகள் வந்து சேரும். மனிதர்கள் நோய்தொற்று இல்லாமல் வாழ வேண்டுமென்றால், அதற்கு பாறு கழுகுகள் உயிர்வாழ வேண்டும்'' என்று அழுத்தம்திருத்தமாக பேசியவர், பாறு கழுகுகள் எப்படி இந்தளவுக்கு அழிந்துபோயின என்பதையும் விவரிக்க ஆரம்பித்தார்.
''மாடுகளுக்கு மடி வீக்கம், உணவு உண்ணாமை போன்ற நோய்கள் வந்தால், டைக்ளோபினாக் என்கிற மருந்தை கால்நடை மருத்துவர்கள் மாடுகளுக்கு செலுத்துவார்கள். மாடுகளின் நோய் உடனே குணமாகி விடும் என்றாலும், அந்த மருந்தில் இருக்கிற விஷத்தன்மை மாட்டின் சிறுநீரகங்களை பாதித்துவிடும். விளைவு, மாடுகள் வெகு விரைவில் இறந்துவிடும். இப்படி நோய்வாய்ப்பட்டு இறந்த மாடுகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாகவோ அல்லது காட்டுப்பகுதிகளையொட்டியோ கொண்டு வந்து போட்டுவிடுவார்கள். இறந்த அந்த மாடுகளின் சடலங்களை பாறுக்கள் சாப்பிடும். மாட்டை பாதித்த அந்த மருந்து, பாறு கழுகுகளை என்னவெல்லாம் செய்யும் தெரியுமா? சடலத்தை சாப்பிட்டுவிட்டு மரங்களில் உட்காரும் பாறுக்கள் சோர்வாக கண்களை மூடும், அவற்றின் வாயிலிருந்து நீர் வடியும். அப்படியே கொத்துகொத்தாக மரக்கிளைகளில் இருந்து கீழே விழுந்து செத்தே விடும்.
அழுகின சடலத்தையும் உண்டு செரிக்கும் பாறு கழுகுகளால் டைக்ளோபினாக் என்ற வலி நிவாரண மருந்தைச் செரிக்க முடியவில்லை. நாடு முழுவதும் மாடுகளுக்கு டைக்ளோபினாக் கொடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்க, அந்த மருந்தை உட்கொண்ட மாடுகளின் சடலங்களைத் தின்ற பாறு கழுகு இனம் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது. மருந்துகளால் வருகிற பின்விளைவுகளை யோசிக்காமல், அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்யாமல் ஒரு பறவை இனத்தையே அழித்து விட்டோம். இறந்ததை தின்று இருப்பதைக் காத்துக்கொண்டிருந்த பாறுக்களில் தப்பிப் பிழைத்தவை தற்போது முதுமலைக்கு பக்கத்தில் இருக்கிற மோயார் பள்ளத்தாக்கு மற்றும் மோயார் ஆற்றங்கரையோரம் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றை பாதுகாக்க அருளகம் போன்ற சில தன்னார்வ அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
பாறு கழுகுகள் வாழ்க்கை முழுவதும் ஒரே துணையோடு மட்டுமே வாழும். ஆண்டுக்கு ஒரேயொரு முட்டைதான் இடும். பாறுக்கள் உருவத்தில் பெரிய பறவை என்பதால் கூட்டுக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட குஞ்சுகளை வைத்துப் பாதுகாக்க முடியாததும்கூட ஒரேயொரு முட்டையிடுவதற்கு காரணமாக இருக்கலாம். உயிர்ச்சூழலியலில் முக்கியமான பங்களிக்கும் பாறுக்களை இனியாவது பாதுகாக்கும் முயற்சிகளை எடுப்போம்'' என்கிறார் கோவை சதாசிவம்.
Vikatan Play
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...