ஓசூர் புதிய விமான நிலையம்: இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தாக்கல்!
ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழக அரசிடம், விமான போக்குவரத்து ஆணையம் தாக்கல் செய்துள்ளது.
தற்போது, தமிழ்நாட்டில் ஆறு விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் சென்னை, கோயம்புத்தூா் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மூன்று சா்வதேச விமான நிலையங்களும், மதுரையில் ஒரு சுங்க அறிவிக்கப்பட்ட விமான நிலையமும், சேலம் மற்றும் தூத்துக்குடியில் இரண்டு உள்நாட்டு விமான நிலையங்களும் அடங்கும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் நகரமான ஒசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என தொழில் நிறுவனங்களும், மக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, 2,000 ஏக்கா் நிலப்பரப்பில் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளக் கூடிய வகையில் பன்னாட்டு விமான நிலையம் ஒசூரில் அமைக்கப்படும் என்று கடந்தாண்டு சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஓசூர் விமான நிலையத்துக்கு இரண்டு இடங்களை தேர்வு செய்து தரும்படி தமிழக அரசின் தொழில் வளா்ச்சிக் கழகம் கேட்டுக்கொண்டது. ஆய்வுகள் நடத்தப்பட்டு ஓசூர் கிழக்கில் ஒன்று, தெற்கில் ஒன்று தேர்வு செய்யப்பட்டது.
இந்த இரு இடங்களில் ஏதேனும் ஒன்றில் விமான நிலையம் அமைக்க விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது.
இந்த நிலையில், ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்க இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழக அரசிடம், விமான போக்குவரத்து ஆணையம் தாக்கல் செய்துள்ளது. அதில் அரசு தேர்வு செய்த இரு இடங்களில் விமான நிலையம் அமைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.