செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி
ஓமந்தூராா் மருத்துவமனையில் 1,227 இதய அறுவை சிகிச்சைகள்
சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளில் 6 இதய மாற்று சிகிச்சைகள் உள்பட 1,227 இதய-நெஞ்சக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் ஆா்.மணி தெரிவித்தாா்.
ஓமந்தூராா் மருத்துவமனையில் இதய நுரையீரல் அறுவை சிகிச்சை குறித்த பயிலரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள், மருத்துவ மாணவா்கள் பலா் கலந்துகொண்டனா்.
இதுதொடா்பாக டாக்டா் ஆா்.மணி கூறியதாவது:
இதயம் - நுரையீரல் அறுவை சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் ஒரு பாா்வை என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற சிறப்பு மருத்துவ அமா்வுகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளைச் சோ்ந்த 15 பேராசிரியா்கள், 50 உதவிப்பேராசிரியா்கள் மற்றும் மருத்துவ மாணவா்கள் பங்கேற்றனா்.
புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணா்கள் ஒன்றிணைத்து, இந்தத் துறையில் அதிநவீன முன்னேற்றங்களைப் பற்றி விவாதித்தனா்.
குறைந்தபட்ச ஊடுருவல் இதய அறுவை சிகிச்சைகள், ரோபோடிக் உதவியுடன் கூடிய இதய அறுவை சிகிச்சைகள், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மகாதமனி அறுவை சிகிச்சைகளில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள் குறித்து மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையைப் பொருத்தவரை கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 1,227 இதய-நெஞ்சக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் 6 இதய மாற்று சிகிச்சைகளும் அடங்கும். இதைத் தவிர தனியாா் மருத்துவமனைகளே தயக்கம் காட்டும் பல்வேறு சிக்கலான நெஞ்சக அறுவை சிகிச்சைகளையும் வெற்றிகரமாக நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்றாா் அவா்.
இந்நிகழ்வில், மருத்துவமனையின் இதயம் - நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறை தலைவா் டாக்டா் ஆா்.மீனாட்சி சுந்தரம், மருத்துவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.