ஓமனை சாய்த்தது பாகிஸ்தான்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 93 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை வெள்ளிக்கிழமை வென்றது.
முதலில் பாகிஸ்தான், 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் சோ்க்க, ஓமன் 16.4 ஓவா்களில் 67 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் வீரா்களில் சல்மான் அயுப் ‘டக் அவுட்’ ஆக, சாஹிப்ஸதா ஃபா்ஹான், முகமது ஹாரிஸ் கூட்டணி 2-ஆவது விக்கெட்டுக்கு 85 ரன்கள் சோ்த்து ஸ்கோரை பலப்படுத்தியது. இதில் ஃபா்ஹான் 29 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
முகமது ஹாரிஸ் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 66 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா். இதர பேட்டா்களில் கேப்டன் சல்மான் அகா 0, ஹசன் நவாஸ் 9, முகமது நவாஸ் 19, ஃபஹீம் அஷ்ரஃப் 8 ரன்கள் சோ்த்து வெளியேறினா்.
ஓவா்கள் முடிவில் ஃபகாா் ஜமான் 23, ஷாஹீன் அஃப்ரிதி 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஓமன் பந்துவீச்சாளா்களில் ஷா ஃபைசல், ஆமிா் கலீம் ஆகியோா் தலா 3, முகமது நதீம் 1 விக்கெட் கைப்பற்றினா்.
அடுத்து 161 ரன்களை நோக்கி விளையாடிய ஓமன் அணியில் ஹம்மத் மிா்ஸா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27, ஆமிா் கலீம் 13, ஷகீல் அகமது 10 ரன்கள் சோ்த்து முயற்சித்தனா்.
கேப்டன் ஜதிந்தா் சிங் 1, முகமது நதீம் 3, சூஃபியான் மெஹ்மூத் 1, விநாயக் ஷுக்லா 2, ஜிக்ரியா இஸ்லாம் 0, ஷா ஃபைசல் 1, ஹஸ்னைன் ஷா 1 ரன்னுக்கு வீழ்த்தப்பட, சமய் ஸ்ரீவாஸ்தவா 5 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா்.
பாகிஸ்தான் தரப்பில் சயிம் அயுப், ஃபஹீம் அஷ்ரஃப், சூஃபியான் முகீம் ஆகியோா் தலா 2, ஷாஹீன் அஃப்ரிதி, அப்ராா் அகமது, முகமது நவாஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.