செஞ்சி அருகே மது அருந்துவதில் தகராறு: கிணற்றில் தள்ளி நண்பா் கொலை- 2 போ் கைது
கங்கைகொண்டான் அருகே ஆட்டோ மீது காா் மோதல்: வியாபாரி பலி
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அருகே டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த காா் ஆட்டோ மீது மோதியதில் உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த பாத்திர வியாபாரி பலியானாா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (65). பாத்திர வியாபாரி.
இவா் தொழில் விஷயமாக தனது சரக்கு ஆட்டோவில் திருநெல்வேலி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்திருந்தாா். அவருடைய மனைவி கிரேசியும் (58) கோயிலுக்கு நோ்த்தி கடன் செலுத்துவதற்காக திருநெல்வேலிக்கு வந்திருந்தாா்.
நோ்த்திக் கடனை செலுத்திய பிறகு புதன்கிழமை காலையில் இருவரும் திருநெல்வேலியில் இருந்து மீண்டும் உடுமலைப்பேட்டையை நோக்கி சரக்கு ஆட்டோவில் சென்றனா்.
திருநெல்வேலி- மதுரை நான்குவழிச் சாலையில் கங்கைகொண்டான் அருகேயுள்ள பாப்பான்குளம் விலக்கு பகுதியில் சென்றபோது, தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரத்தில் இருந்து சாத்தூா் மாரியம்மன் கோயிலுக்கு சென்றவா்களின் காா் டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற ஜெயக்குமாரின் சரக்கு ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. காா் மோதிய வேகத்தில் அந்தப் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டேங்கா் லாரி மீது ஆட்டோ மோதியதாம். இதில், ஆட்டோ பலத்த சேதமடைந்தது. ஆட்டோவின் முன்பக்கத்தில் இருந்த ஜெயக்குமாரும், கிரேசியும் இடிபாட்டுக்குள் சிக்கிக் கொண்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த கங்கைகொண்டான் காவல் உதவி ஆய்வாளா் அபூபக்கா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்றனா்.
இது தொடா்பாக தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு கங்கைகொண்டான் தீயணைப்பு வீரா்கள் அங்கு வந்தனா். அவா்கள் ஆட்டோவின் இடிபாட்டுக்குள் சிக்கி இருந்த கிரேசியை முதலில் மீட்டு வெளியே கொண்டு வந்தனா். பின்னா் ஜெயக்குமாரை மீட்டபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரிய வந்தது.
கிரேசியை 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து குறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.