கச்சா எண்ணெய் இருப்பு உறுதி; 300 கி.மீட்டர் பரப்பளவில் கிணறுகள் அமைக்கும் ONGC.. உ.பி-க்கு ஜாக்பாட்!
இந்தியாவில் பெட்ரோல் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைக்கிறது. மும்பை கடல் பகுதி, குஜராத், அஸ்ஸாம் போன்ற பகுதியில் அதிக அளவில் கிடைக்கிறது. இந்த நிலையில், புதிதாக உத்தரப்பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் உள்ள சாகர்பலி என்ற கிராமத்தில் கச்சா எண்ணெய் இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கடந்த 3 மாதங்களாக ஒ.என்.ஜி.சி அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தினர். சுதந்திர போராட்ட தியாகி சிட்டு பாண்டே என்பவரின் நிலத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சிட்டு பாண்டேயின் குடும்பத்திற்கு சொந்தமான ஆறரை ஏக்கர் நிலத்தை ஒ.என்.ஜி.சி நிர்வாகம் 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து இருக்கிறது.

இதற்காக ஆண்டுக்கு 10 லட்சம் வாடகை பேசப்பட்டுள்ளது. மூன்று மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கச்சா எண்ணெய் இருப்பது உறுதி செய்யப்பட்ட இடத்தில் ஒ.என்.ஜி.சி அதிகாரிகள் போர்போடும் வேலையை தொடங்கிவிட்டனர். இப்பணி அடுத்த மாதம் இறுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போரில் கச்சா எண்ணெய் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதனை சுற்றி 300 கிலோமீட்டர் தூரத்திற்குட்பட்ட பகுதியில் மேலும் சில போர்வெல் கிணறுகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் இப்பகுதி விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும். அதோடு விவசாயிகளிடமிருந்து கூடுதல் விலைக்கு நிலத்தை ஒ.என்.ஜி.சி நிர்வாகம் வாங்க வாய்ப்பு இருக்கிறது.
பிரயக்ராஜ் வரை தோண்ட திட்டமிட்டுள்ளனர். தற்போது போர்போடுவதற்கு தினமும் 25 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவையாக இருக்கிறது என்று ஒ.என்.ஜி.சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெட்ரோல் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு ஒ.என்.ஜி.சி 5 ஆயில் மற்றும் கச்சா எண்ணெய் கிணறுகளை கண்டுபிடித்துள்ளது. 2021ம் ஆண்டு கணக்கெடுப்பு படி இந்தியாவில் 587.335 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு கச்சா எண்ணெய் இருப்பு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.