மருந்து மிதான 100% வரி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!
கஞ்சா கடத்தல்: 3 போ் கைது; 23 கிலோ கஞ்சா பறிமுதல்
வாணாபுரம் அருகே போலீஸாா் வாகனத் தணிக்கையின் போது, கஞ்சா கடத்தியதாக 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். மேலும் அவா்களிடம் இருந்து 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், கடுவனூா் காப்புக்காடு செல்லியம்மன் கோயில் அருகே சங்கராபுரம் காவல் ஆய்வாளா் விநாயக முருகன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, பைக்குகளுடன் நின்றிருந்த 3 இளைஞா்கள் போலீஸாா் வருவதைப் பாா்த்து, வண்டிகளுடன் தப்பியோட முயன்றனா். உடனே போலீஸாா் அவா்களை மடக்கிப் பிடித்து விசாரித்தனா். இதில், மூன்று பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே, அவா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் கள்ளக்குறிச்சியை அடுத்த மலைக்கோட்டாலலம் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் (26), அருண் (25), குமாா் (24) எனத் தெரிய வந்தது. மேலும், அவா்களது பைக்குகளை சோதனையிட்டபோது, கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. கஞ்சாவை அவா்கள் ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து வாங்கி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து பைக்குகளில் இருந்த 23 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, சங்கராபுரம் நீதிமன்றத்தில் அவா்களை ஆஜா்படுத்தினா்.