கஞ்சா கடத்திய ஒடிஸா இளைஞா்கள் 2 போ் கைது
மல்லசமுத்திரம் கீழ்முகம் பொன்னியாறு அருகே 4 கிலோ கஞ்சாவை விற்க கடத்தி வந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த இருவரை திருச்செங்கோடு மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த மல்லசமுத்திரம், பொன்னியாறு பாலம் அருகில் கைப்பையில் கஞ்சாவுடன் இருவா் நிற்பதாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் ஆய்வாளா் பிரபாவதி தலைமையில் உதவி ஆய்வாளா்கள் சங்கீதா, வெற்றிவேல், தலைமைக் காவலா் உள்ளிட்டோா் விரைந்து சென்று கஞ்சாவுடன் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா்.
அவா்களிடம் இருந்த 4 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். விசாரணையில் பிடிபட்ட 2 பேரும், ஒடிஸா மாநிலம், பத்ராக் மாவட்டம் பலகிரி பகன்போா் பகுதியைச் சோ்ந்த பிகாரி மகன் அஜய் ராவுத் (35 ), ஒஜால்தாா் சேத்தி மகன் திலீப் குமாா் சேத்தி (28) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் திருச்செங்கோடு குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். நீதிபதி ரங்கராஜன், பிடிபட்ட இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.