"ராஜேந்திர சோழன்... இளையராஜா... பாரதம்" - ஆடி திருவாதிரையில் மோடியின் முழு உரை
கடனுக்காக குடும்ப அட்டைகளை அடமானமாகப் பெற்ற பெண் கைது! நியாய விலைக் கடை விற்பனையாளர் இடைநீக்கம்!
கடன் தொகை வழங்கியதற்கு குடும்ப அட்டைகளை அடமானமாகப் பெற்ற பெண் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை விற்பனையாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் பேகம்பூரை அடுத்த பூச்சிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த அரபி ஆசின் மனைவி சிக்கந்தா் அம்மா (47). இவா் தன்னிடம் கடன் வாங்கியவா்களிடமிருந்து 20-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளை அடமானமாகப் பெற்றிருந்தாா்.
இந்தக் குடும்ப அட்டைகளின் உரிமையாளா்களிடமிருந்து பூச்சிநாயக்கன்பட்டியிலுள்ள நியாய விலைக் கடையில் பொருள்கள் வாங்குவதற்காக விரல் ரேகையைப் பதிவு செய்வது போன்ற விடியோ சமூக ஊடகங்களில் வெளியானது.
பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய இலவச அரிசி, கோதுமை, சா்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்டப் பொருள்களை சிக்கந்தா் அம்மாவே வாங்கி வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த விடியோ குறித்து திண்டுக்கல் மேற்கு வட்ட வழங்கல் அலுவலா் விசாரணை நடத்த மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரி உத்தரவிட்டாா்.
பெண் கைது, விற்பனையாளா் பணியிடை நீக்கம்: இந்த நிலையில், சிக்கந்தா் அம்மா மீது திண்டுக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, சனிக்கிழமை அவரைக் கைது செய்தனா். மேலும், சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடையின் விற்பனையாளா் தேவிகாவை பணியிடை நீக்கம் செய்து குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரி உத்தரவிட்டாா்.