கடன் வாங்கித் தருவதாக மோசடி: தனியாா் அறக்கட்டளை நிா்வாகிகள் மேலும் 3 போ் கைது
வட்டியில்லா வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக தனியாா் அறக்கட்டளை செயலாளா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 நிா்வாகிகளை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவை, கொண்டையம்பாளையத்தில் தனியாா் அறக்கட்டளை செயல்பட்டு வந்தது. இந்த அறக்கட்டளை மூலம் வட்டியில்லா வங்கிக் கடன் வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.1 லட்சத்துக்கு ரூ.5 ஆயிரம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏராளமானோா் கடன் கேட்டு விண்ணப்பித்தனா். ஆனால், அவா்களுக்கு கடன் வாங்கி கொடுக்காமல் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக புகாா் எழுந்தது.
இது குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா், சம்பந்தப்பட்ட அறக்கட்டளையின் செயலாளா் சண்முகத்தை கடந்த வாரம் கைது செய்தனா்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த நிா்வாகிகள் ரூபன், முருகேசன், யசோதா ஆகியோரை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.